| ADDED : ஏப் 23, 2024 05:10 AM
புதுச்சேரி : இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் புதிய பஸ் நிலையத்தில் நுாற்றுக்கணக்கான பைக் நிறுத்தி மேலும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி செலவில், வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. பஸ் நிலையத்தின் நடு பகுதியில் கட்டுமான பணி நடப்பதால், இடபற்றாக்குறை உருவாகி உள்ளது. கட்டுமான பணி போக மீதமுள்ள குறுகிய இடத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.இட நெருக்கடியால் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம், கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே சென்று விடுகிறது.இந்த சூழ்நிலையில்,பஸ் நிலையத்திற்குள் நுாற்றுக்கணக்கான பைக்குகள் நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். வெளியூரில் வேலைக்கு செல்லும் பலர் பஸ் நிலைய கார்த்திக் ஓட்டல் அருகில் பைக்குகளை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். மாலை புதிய பஸ் நிலையம் திரும்பி பைக்குகளை எடுத்து செல்கின்றனர்.குறுகிய இடத்தில் நுாற்றுக்கணக்கான பைக்குகள் நிறுத்துவதால் பஸ்களை திருப்ப முடியாமல் பஸ் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதிய அளவிலான பஸ் வராததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பஸ் நிலையத்தில், பைக்குகள் நிறுத்துவதை தடுக்க புதுச்சேரி நகராட்சி மற்றும் உருளையன்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.