புதுச்சேரி: புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்ப கோப்பு, ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம், ஒரிரு நாட்களில் அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசு தொகுப்பில் நெய்வேலி, ராமகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மின்சாரம் புதுச்சேரிக்கு பெறப்படுகிறது. ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு பெறும் மின்சாரத்திற்கு, கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தின் அடிப்படையில், நுகர்வோருக்கு மின்சார கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும், ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம், அரசின் மின்துறை வரவு - செலவு விவரம் தாக்கல் செய்து, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒழுங்குமுறை மின்சார ஆணையம், புதுச்சேரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி கட்டணம் நிர்ணயிக்கின்றனர். நடப்பு ஆண்டிற்கான, மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம், அரசின் மின்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது. இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், மின்சாரத்தை பெற்று பழைய கட்டணத்தில் விநியோகம் செய்தால் ரூ.148 கோடி இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்த, மின்துறை அனுமதி கேட்டிருந்தது.வீட்டு மின் இணைப்பு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம், நிலைக்கட்டணம் உயர்த்த அனுமதி கேட்கப்பட்டது. அதில், வீட்டு மின் உபயோகத்தில், யூனிட்டுக்கு, 45 பைசாவில் இருந்து, 75 பைசா வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், நிலைக்கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.30.,ல் இருந்து, ரூ.35 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தாமல், நிலைக்கட்டணத்தை, ரூ.75,ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்துவும் அனுமதி தந்தனர்.இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து புதுச்சேரியில், மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பாக, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மின்துறை செயலர் முத்தம்மா, கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கும் படி, அதிகாரிகளிடம் அமைச்சர் நமச்சிவாயம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் மின் கட்டணத்தை, மறு சீரமைப்பு செய்யும் படி கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்ப கோப்பு, ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம், ஒரிரு நாட்களில் அனுப்பப்பட உள்ளது. இதனால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவது நிறுத்தி வைக்கப்படுகிறது.