புதுச்சேரி, : புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருந்து கொள்முதல் முறைகேடு தொடர்பாக, மத்திய தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தி வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல வழி மையங்களில், கடந்த, 2018-19ல், கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.இரு தனியார் ஏஜென்சிகள், இந்த மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க மருந்தாளுநர் நடராஜன் மற்றும் அதிகாரிகளுக்கு, இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.மருந்தாளுநர் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்சிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து, நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மோசடி குறித்து, சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், நடராஜன் மற்றும் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மாநில சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மருந்து மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக, இந்திய தணிக்கை குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய தணிக்கை குழுவினர், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள, தேசிய ஊரக சுகாதார இயக்க பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த, 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய தணிக்கை குழு விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு, இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மத்திய தணிக்கை குழுவினரின் அதிரடி விசாரணையால், புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.