| ADDED : ஜூலை 12, 2024 05:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க முடியாது என, மத்திய அரசு கைவிரித்தது.புதுச்சேரி அரசில் பல ஆண்டுகளாக அரசு பணியிடம் நிரப்பாததால், வயது தளர்வு அளிக்க கோரிக்கை எழுந்தது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் வயது தளர்வு அளித்து, 2020ம் ஆண்டு தேர்வு நடந்தது. குரூப் - சி பணியிடங்கள் நிரப்புவதற்கான பணி நியமன விதிகளை மாநில அரசு கவர்னர் ஒப்புதலுடன் திருத்தம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.அதன்படி, குரூப் - சி பணியிடங்களான கான்ஸ்டபிள், எல்.டி.சி., யு.டி.சி., உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பும்போது, கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி 2 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டது.குரூப் சி பணியிடத்தை தொடர்ந்து, அரசிதழ் பதிவு பெறாத குரூப் -பி பணியிடமான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்புவதற்காக அப்போதைய கவர்னர் தமிழிசைக்கு கோப்பு அனுப்பப்பட்து.இந்த கோப்பினை பரிசீலனை செய்த அவர், அனைத்து குரூப் - பி அரசிதழ் பதிவு பெறாத, பணியிடங்களுக்கான நேரடி ஆள் சேர்ப்பில், வயது வரம்பில், 2 ஆண்டுகள் தளர்வு அளிக்க கோரி, மத்திய அரசுக்கு முன்மொழிவு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார்.இந்த கோப்பு மத்திய அரசுக்கு சென்ற நிலையில் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க முடியாது என கைவிரித்தது.இந்த முடிவினை சுட்டிகாட்டி, புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்திருத்த துறை அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், அதிகபட்ச வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்த்துவதற்கான முன்மொழிவு, ஒருமுறை நடவடிக்கையாக, உள்துறை அமைச்சகம், பணியாளர் துறைக்கு அனுப்பி கலந்தாலோசித்து ஆய்வு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு வயது தளர்விற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.எனவே, கேடர் கன்ட்ரோலிங் அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட அரசிதழ் பதிவு பெறாத குரூப்-பி காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடரலாம். மேலும் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தேர்வு செயல்முறையை விரைவாக முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டு வயது தளர்வினை எதிர்பார்த்து காத்திருந்த புதுச்சேரி இளைஞர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.