| ADDED : ஜூன் 11, 2024 05:47 AM
திருக்கனுார்: திருக்கனுாரில் தொடர் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளே புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இயங்கி வந்த 2 பவர் மின்மாற்றியில் , ஒன்று கடந்த ஜனவரி 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டு சேதம் அடைந்தது. சேதமடைந்த மின்மாற்றி 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் சரி செய்யப்படவில்லை.இதன் காரணமாக திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, திருக்கனுார் பகுதிகளில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மின்தடை நிலவுகிறது.இதனால், வீடுகளுக்கான குடிநீர் வினியோகம் பாதிக்கப் படுவதுடன், பொதுமக்கள் வெயிலின் காரணமாக சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நேற்று காலை திருக்கனுார் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலை 10:30 மணி வரை அலுவலகத்திற்கு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் வராததால், கோபமடைந்த பொதுமக்கள் திடீரென அலுவலகத்தின் உள்ளே புகுந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமரும் நாற்காலியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மின்துறை அதிகாரிகள் வந்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து மின்பற்றாக்குறை விரைவில் சரிசெய்து, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.