| ADDED : ஜூலை 09, 2024 03:54 AM
புதுச்சேரி,: சி.ஏ.பி., கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம்., நிறுவனம் சார்பில், 6 அணிகள் மோதிய 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், டைகர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.புதுச்சேரி சி.ஏ.பி., -சீகெம் மைதானத்தில், 20 ஓவர் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று காலை துவங்கிய, போட்டியில் புல்ஸ் அணியும், டஸ்கர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டஸ்கர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டஸ்கர்ஸ் அணியின் ஆகாஷ் புகழேந்தி 58 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து ஆடிய புல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டஸ்கர்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது சிறப்பான பேட்டிங்கால் ஆட்டநாயகன் விருதை டஸ்கர்ஸ் அணியின் ஆகாஷ் புகழேந்தி தட்டிச்சென்றார்.அதனை தொடர்ந்து, பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கிய போட்டியில், லயன்ஸ் அணியும், டைகர்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய லயன்ஸ் அணி 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தது. லயன்ஸ் அணியின் மோஹித் காலே 30 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஆடிய டைகர்ஸ் அணி 12.5 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைகர்ஸ் அணியின் சஞ்சய் சுதாகர் 31 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டைகர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது சிறப்பான பந்து வீச்சால் ஆட்டநாயகன் விருதை டைகர்ஸ் அணியின் ஸ்ரீராஜ் தட்டிச்சென்றார்.