| ADDED : ஜூன் 23, 2024 05:14 AM
கன்னியக் கோவில் சந்திப்பில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் புதியதாக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி - கடலுார் சாலை, கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் கோவில்கள், திருமண மண்டபங்கள், பெட்ரோல் பங்க், வங்கி உள்ளிட்டவைகள் உள்ளன. இப்பகுதியில், போக்குவரத்து சிக்னல் இல்லாத நிலையில், சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். இங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு, கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் சிக்னல் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதன்படி, நேற்று முன்தினம் கன்னியக்கோவில் சந்திப்பில் மூன்று இடங்களில் கம்பங்கள் நடப்பட்டு அதில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.