உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வருக்காக போக்குவரத்து நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முதல்வருக்காக போக்குவரத்து நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுச்சேரி: சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க செல்லும் முதல்வருக்காக, ராஜிவ் சிக்னல் மற்றும் ராஜா தியேட்டர் சிக்னலை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தினமும் காலை 9:15 மணியளவில், அப்பா பைத்தியம் சுவாமி கோவில் அருகே அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து முதல்வர் ரங்கசாமி புறப்படுகிறார்.ராஜிவ் சிக்னல், காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சிக்னல், நேரு வீதி வழியாக சட்டசபைக்கு செல்வது வழக்கம்.முதல்வர் வருகையை முன்னிட்டு, 15 நிமிடங்களுக்கு முன்னதாக, ராஜிவ் மற்றும் ராஜா தியேட்டர் சிக்னல்களை நிறுத்தி போக்குவரத்தை போலீசார் தடை செய்கின்றனர்.காலை 9:30 மணி என்பது போக்குவரத்து உச்சக்கட்டமாக இருக்கும் நேரம் என்பதால் கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.முதல்வரின் கார் மற்றும் அவரது பைலட் வேகத்தில் சிக்னலை கடந்து சென்றவுடன்,ஒரே நேரத்தில் அனைத்து பக்கமும் சிக்னல் விளக்குகள் எரிய விடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அனைத்து திசைகளில் இருந்தும் வாகனங்கள் ஒரே நேரத்தில் முந்தி செல்வதால், சிக்னல்களில் போக்குவரத்து சீரடைவதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாகி விடுகிறது.பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் ஊழியர்களும், அவசர வேலையாக செல்பவர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இது, முதல்வர் ரங்கசாமிக்கு தெரியுமா?சிக்னல்களை நிறுத்தி பொதுமக்களை கஷ்டப்படுத்துவதற்கு பதிலாக, எதிர்காலத்தில் சட்டசபை அலுவல்கள் துவங்கும் நேரத்தை காலை 9:30 மணிக்கு பதிலாக 10:00 மணிக்கு பிறகு மாற்றி அமைக்கலாம் அல்லது கடைசி நேரத்தில் புறப்படுவதை தவிர்த்து, 9:00 மணிக்கே வீட்டில் இருந்து முதல்வர் சட்டசபைக்கு செல்ல முன் வர வேண்டும்.மற்ற அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வரும்போதும் போக்குவரத்து சிக்னலை நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது. அதுபோல, போலீஸ் அதிகாரிகள் சிலராலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்களுக்கு முன்னால் 4 பைக், பின்னால் 4 பைக் பாதுகாப்புடன், நகர பகுதியில் டிராபிக்கை முழுதும் நிறுத்தி அசுர வேகத்தில் பறக்கின்றனர்.வி.ஐ.பி.,க்கள் செல்லும்போது, டிராபிக் சிக்னல்களில் போக்குவரத்தை நிறுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை