சுட்டெரிக்கும் கோடை வெயிலில் விலங்குகள், பறவைகள் தாகம் தீர்க்க, உழவர்கரை நகராட்சி சார்பில் 9 இடங்களில் தொட்டிகளில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த 1 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கலெக்டர் மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் கூடும் இடங்களில் தாகம் தீர்க்க, உழவர்கரை நகராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோரிமேடு ஜிப்மர் பஸ் நிறுத்தம், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, ராஜிவ்காந்தி குழந்தைகள் விளையாட்டு பூங்கா பஸ் நிறுத்தம், லாஸ்பேட்டை உழவர் சந்தை, தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல் இ.சி.ஆர்., பஸ் நிறுத்தம், மூலக்குளம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. விலங்குகள் மீது பரிவு
மேலும், விலங்குகள் மற்றும் பறவைகள் தாகம் தீர்க்க, மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம், லாஸ்பேட்டை ஹெலிபேட், லாஸ்பேட்டை அசோக் நகர் குழந்தைகள் விளையாட்டு பூங்கா, குறிஞ்சி நகர் பூங்கா, ஜவகர் நகர் உழவர்கரை நகராட்சி அலுவலகம், குறிஞ்சி நகர் ராஜிவ் காந்தி குழந்தைகள் விளையாட்டு பூங்கா, ரெயின்போ நகர் பூங்கா, காமராஜர் மணிமண்டபம், இ.சி.ஆர்., நவீன சுகாதார மீன் அங்காடி பகுதியில் சிறிய தொட்டிகளில் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலையில் திரியும் கால்நடைகள், நாய்கள், பறவைகள் தண்ணீர் அருந்தி செல்கிறது.நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் கூறுகையில், இந்திரா சிக்னலில் பசுமை பந்தல் 2 நாட்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நீர் அருந்துவதற்கு ஏற்ப சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம் என, கேட்டுக்கொண்டார்.