| ADDED : ஏப் 20, 2024 05:13 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டளித்தனர். புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி, பரபரப்புடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், நேற்று காலை, அவரது மனைவி வசந்தியுடன் வில்லியனுார் மணவெளி அரசு தொடக்கப் பள்ளி மையத்திற்கு சென்று ஓட்டுப் போட்டார். பின், நமச்சிவாயம் அப்பா பைத்திய சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார்.அதேபோல, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், நெட்டப்பாக்கம் தொகுதி, மடுகரை அரசுப்பள்ளியில் மதியம் ஓட்டளித்தார். அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்வேந்தன், வீராம்பட்டினத்தில் உள்ள சிங்கார வேலர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, புதுச்சேரி செட்டி தெரு சொசியெத்தே புரோகிரெசிஸ்தே அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், நேற்று காலையில் முதல் நபராக ஓட்டுப் போட்டார்.