| ADDED : ஆக 15, 2024 04:55 AM
புதுச்சேரி: 'புதுச்சேரி மாநில விளையாட்டு கவுன்சில் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதற்கு, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் வளவன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:புதுச்சேரி பள்ளிகளுக்கு இடையே நடக்கும், ஜோனல் மற்றும் மாநில அளவிலான சான்றிதழ் பெற்றவர்களுக்கு சென்டாக் மூலமாக மேற்படிப்புகளில் சேருவதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனர். வெளிப்படையாக அனைத்து விபரங்களையும் அறிவிக்க வேண்டும்.விளையாட்டு அரங்கங்களில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படையான வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள 'சின்தடிக்' ஓடுதளத்தை திறந்து, விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஒரே காரணத்தால் அந்த ஓடுதளம் முற்றிலும் பழுதடைந்துள்ளது. ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை சீர் செய்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 ஆண்டுகளாக காரணம் இன்றி மூடி கிடக்கும் அண்ணா திடல் மற்றும் பாகூர் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் விளையாட்டுத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பேனர் வைத்துள்ளனர். ஆனால், விளையாட்டு துறையில் கடைநிலை ஊழியர் முதல், இயக்குனர் வரை அனைத்து பதவிகளும் காலியாக உள்ளது. புதுச்சேரி மாநில விளையாட்டு கவுன்சில் மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதற்கு, கவர்னர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.