| ADDED : ஆக 18, 2024 04:31 AM
சமூக வலைதளங்கில் உலா வரும் பகுதி நேர வேலைகளை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் சமீபகாலமாக நிறைய பகுதி நேர விளம்பரங்கள் பளீச்சிட்டு, அவற்றிற்கான லிங்க்குடன் உலா வருகின்றன.அதில், பகுதி நேரமாக கைநிறைய சம்பாதிக்க ஆசையா... அப்படியென்றால் உங்களை தான் நாங்கள் தேடி கொண்டு இருக்கிறோம். ரொம்ப சிம்பிள். வீட்டில் இருந்தபடியே நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையதளத்திற்கு நுழைந்து மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் வழங்கினால் போதும். மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, அழைப்பு விடுகின்றன.அந்த லிங்கை திறந்து நுழைந்து, அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்து கொடுத்தால், எதிர்பார்க்காத அளவிற்கு சம்பளமாக வங்கி கணக்கிற்கு வந்து விழுகிறது. கொஞ்சம் நாட்கள் கடந்ததும், எவ்வளவு காலம் தான் இப்படி நீங்கள் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்வீர்கள். நீங்களும் முதலீடு செய்தால், மாதம் 6 லட்சம் ரூபாய் வரை வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம். நானும் அப்படி தான் இப்படி சம்பாதிக்கிறேன் என, அட்வைஸ் செய்கின்றனர். அதன்படி லட்சக்கணக்கில் முதலீடு செய்பவர்களின் மொத்த பணத்தையும் சுருட்டி கொண்டு மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு அமைதியாகி விடுகின்றனர். சமீபகாலமாக புதுச்சேரி இளைஞர்கள் பலரும் இப்படித்தான் பணத்தை இழந்து வருகின்றனர்.இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இப்படி எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சமூகவளைதளங்கில் வேலை, பகுதி நேர வேலை என்று லிங்க் வந்தால் அதனை நம்ப வேண்டாம். அனைத்துமே போலி. உங்கள் பணத்தை சுருட்ட இணையதளத்தில் வீசப்படும் துாண்டில். அப்படிப்பட்ட லிங்குகளை கிளிக் செய்து யாரும் செல்ல வேண்டாம். அவற்றை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் டவுன்லோடு செய்திருக்கும் பட்சத்தில், அதில் பணம் செலுத்தச் சொன்னால் பணம் செலுத்த வேண்டாம். இணையம் மூலம் நடைபெறும் இந்த மோசடியில் பலர் சிக்கி, தங்கள் பணத்தை இழக்கின்றனர் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.