| ADDED : ஜன 19, 2024 10:56 PM
புதுச்சேரி, -சேலத்தில் நாளை நடக்கும் தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் புதுச்சேரியில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பது என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி தி.மு.க., செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சம்பத் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் நாளை 21ம் தேதி சேலத்தில் நடக்கும் இளைஞர் அணி மாநில மாநாட்டில் புதுச்சேரி தி.மு.க., சார்பில் தொகுதி வாரியாக, அணிகள் வாரியாக 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பது, 25ம் தேதி மாநில மாணவர் அணி சார்பில், நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. மொழிப்போர் தியாகிகளை கவுரவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர் குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சன்குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.