| ADDED : பிப் 21, 2024 08:44 AM
புதுச்சேரி : ஏனாமில் சுற்றுலா பயணிகளை தாக்கிய தி.மு.க., பிராந்திய தலைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பிராந்தியமான ஏனாம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன், கோதாவரி ஆற்றின் அருகில் ஆந்திரா பகுதியில் அமர்ந்து மது அருந்தினர்.அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களை போலீஸ் என கூறி, மது அருந்திய சுற்றுலா பயணிகளை தாக்கினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அங்கிருந்து தப்பித்த 4 சுற்றுலா பயணிகளும் காரில் ஏனாமிற்கு வந்தனர். ஆந்திரா கும்பல், ஏனாம் தி.மு.க., பிராந்திய தலைவர் அரதடி போசய்யாவிற்கு தகவல் தெரிவித்தது.போசய்யா மற்றும் அவரது நண்பர்கள் மேத்தா, மணிகந்தா, கொள்ளு மரிதாயா ஆகியோர் கனகம்பேட்டா அருகில் நின்றிருந்த சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து தாக்கினர்.ரோந்து சென்ற ஏனாம் போலீசார், சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்த அரதடி போசய்யா, மேதா, மணிகந்தாஆகியோரை பிடித்தனர்.விசாரணையில், ஆந்திராவில் நடந்த பிரச்னை தொடர்பாக அரதடி போசய்யா உள்ளிட்டோர் சுற்றுலா பயணிகளை மிரட்டி தாக்கியது தெரியவந்தது.மேலும் அரதடி போசய்யா மீது ஏற்கனவே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. இதைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் ஏனாம் போலீசார் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து, அரதடி போசய்யா, மணிகந்தா, மேதா ஆகியோரை கைது செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.