| ADDED : ஜன 11, 2024 04:01 AM
புதுச்சேரி: சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் இடம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி தனியார் ஓட்டலில், இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில், தனியார் நிறுவனங்களின் மனித வள அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:பிரதமர்'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தைஅறிவித்து இந்தியாவில் தயாரித்த பொருட்களை மக்கள் வாங்க அறிவுறுத்தி வருகிறார். அதன்படியே, புதுச்சேரி அரசும் செயல்பட்டு வருகிறது.சேதராப்பட்டில் உள்ள, 750 ஏக்கர் இடம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், போடப்பட்டுள்ளது. அந்த இடம் விரைவில் தொழில் முதலீட்டாளர்களிடம்ஒப்படைக்கப்படும். நகர பகுதியில் உள்ள இடங்களில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த, 2017 ம் ஆண்டு முதல், நிலுவையில் இருந்த தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய, நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை,25 கோடி ரூபாய்வரை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சி உள்ள, 6 கோடி ரூபாய் அடுத்த, 15 நாட்களில் வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி மாநிலம், தொழில் துவங்க ஏதுவான மாநிலமாக உருவாகி உள்ளது.இங்கு தொழில் தொடங்க, வசதி வாய்ப்புகள் உள்ளன.விரைவில் புதுச்சேரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். புதுச்சேரியில் சிறு குறு தொழில் துவங்க தொழில் முதலீட்டாளர்கள் மூன்று ஆண்டுகள் வரை எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை. மூன்று ஆண்டுகள் முடியும் தருவாயில், அனுமதி பெற்றுக்கொள்வதற்கான கோப்பு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.