| ADDED : நவ 19, 2025 08:05 AM
புதுச்சேரி: தனியார் நிறுவனங்களில் புகுந்து, பெண்ணை மிரட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை, கவர்னரிடம் மனு அளித்த அவர், கூறியதாவது: காலாப்பட்டில் இயங்கி வரும் மூன்று நிறுவனங்களில், சிலர் புகுந்து அங்கு பணிபுரியும் பெண்களை மிரட்டி, இழிவுப்படுத்தி பேசியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தொழிற்சங்க சிறப்பு தலைவர் என்ற முறையிலும், தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையிலும் டி.ஐ.ஜி., ஐ.ஜி., உள்ளிட்டோரிடம் புகார் அளித்தேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். உள்துறை அமைச்சரிடமும் இதுகுறித்து கூறினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிறுவனத்தினர் புகார் கொடுக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர். அவர்கள் எப்படி புகார் கொடுப்பார்கள். இதுகுறித்து ஆதாரத்துடன் கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொகுதியை சேர்ந்த பெண்களையும், பொதுமக்களையும் திரட்டி கவர்னர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். எதற்கும் தயாராக உள்ளேன். யாருடைய தலையீடு இருந்தாலும் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.