| ADDED : செப் 13, 2026 11:52 PM
புதுச்சேரி: பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த நவீன உடற்பயிற்சி மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியை புதுச்சேரி நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை, கருவடிக்குப்பம் சாலையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான உடற்பயிற்சி மையம் மற்றும் உள்ளரங்க பூப்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த மையம் அவசர அவசரமாக ரிப்பன் வெட்டித் திறக்கப்பட்டது. இருப்பினும், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே கதவுகள் பூட்டப்பட்டு, பல மாதங்களாக யாருக்கும் பயன்படாமல் முடங்கிக் கிடந்தது. இதனால் அப்பகுதி விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்தனர்.இந்த நிலையை மாற்றி, உடற்பயிற்சி மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர புதுச்சேரி நகராட்சி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘முத்தியால்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த நவீன உடற்பயிற்சி மையம் மற்றும் உள்ளரங்க பூப்பந்து மைதானத்தை திறம்பட இயக்கவும், முறையாக பராமரிக்கவும் மின்னணு ஏலம் கோரப்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி இந்த ஏலம் நடைபெறுகிறது. அதில் தகுதியான ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் முழு வீச்சில் திறக்கப்படும்’ என்றனர். நகராட்சியின் இந்த நடவடிக்கையால் முத்தியால்பேட்டை பகுதி மக்களும், உடற்பயிற்சி ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.