தி.மு.க., மக்களை ஏமாற்றுகிறது: அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி: தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் மக்களை ஏமாற்றும் செயலில் தி.மு.க., ஈடுபட்டு வருவ தாக அ.தி.மு.க., அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் தி.மு.க., மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில அந்தஸ்து மற்றும் விமான நிலைய விரிவாக்கம் குறித்து தி.மு.க., கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. தற்பொழுது தேர்தலை முன்னிறுத்தி தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்தை உடனடியாக பெற்று தரு வோம் என்கின்றனர் . புதுச்சேரி மாநில வளர்ச்சியின் ஒரு பங்காக உள்ள விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் தராத தி.மு.க., மாநில வளர்ச்சி பற்றி பேசுவது கீழ்த்தரமான ஒரு செயலாகும். புதுச்சேரி மக்கள் தி.மு.க,வை புறக்கணிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.