உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச கோதுமை திட்ட ஆயத்த பணிகள்.... துவங்கியது: உணவு கழகத்தில் கொள்முதல் செய்ய ஆலோசனை

இலவச கோதுமை திட்ட ஆயத்த பணிகள்.... துவங்கியது: உணவு கழகத்தில் கொள்முதல் செய்ய ஆலோசனை

புதுச்சேரி: ரேஷன் கடைகளில் இலவச கோதுமை திட்டத்திற்கானபணிகளை அரசு வேகப்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த காங்., ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய தடை விதித்ததால், ரேஷன் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசின் உத்தரவின்படி, நேரடி பணபரிமாற்ற திட்டத்தின் கீழ் அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கியில் செலுத்தும் நடைமுறையை கொண்டு வந்தார். இதனால், கடந்த 2019ல் ரேஷன் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. அதன்படி, ஒரு கிலோ அரிசி ரூ. 30 என, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோவுக்கு ரூ. 300, சிகப்பு கார்டுக்கு 20 கிலோவுக்கு ரூ.600 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற புதுச்சேரி அரசு, தற்போது மீண்டும் ரேஷன் கடைகள் திறந்து இலவச அரிசியை வழங்கி வருகிறது. அதே வேளையில் முதல்வர் ரங்கசாமி பல முறை அறிவித்த 2 கிலோ இலவச கோதுமை திட்டம் இன்னும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படவில்லை. என்ன காரணம் இலவச அரிசி தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்றே, தனியாரிடம் கோதுமையை கொள்முதல் செய்து விநியோகிக்கலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், தனியாரை காட்டிலும் இந்திய உணவு கழகத்திடம் கோதுமையை வாங்கலாம் என, அரசு செயலர்கள் மாறுபாட்ட கருத்தினை முன் வைத்தனர். இந்திய உணவு கழகத்தில் கோதுமை கொள்முதல் ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இதன் மூலம் பல கோடி ஆண்டிற்கு மிச்சமாகும் என்பது அரசு துறை செயலர்களின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாகவே இலவச கோதுமை திட்டம் இன்னும் துவங்கப்படவில்லை. இருப்பினும், இந்திய உணவு கழகத்திடம் கோதுமையை கொள்முதல் செய்யலாம் என்ற இறுதி முடிவுக்கு புதுச்சேரி அரசு வந்துள்ளது. எனவே விரைவில் ரேஷன் கடைகளில் இலவச கோதுமை திட்டத்தை துவங்குவதற்கான ஆயத்த பணிகளை கான்பெட் வழியாக புதுச்சேரி அரசு முடுக்கிவிட்டுள்ளது. புதிய நிறுவனம் தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் கான்பெட் நிறுவனம் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கான்பெட் நிறுவனத்திற்கு இலவச அரிசியை சர்வோ பேக்கேஜ் நிறுவனம் தற்போது சப்ளை செய்கிறது. நேற்று இலவச அரிசி திட்டதிற்கான டெண்டர் திறக்கப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களின் கூட்டுறவு நிறுவனமான கேந்திரிய வந்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கான்பெட் நிறுவனத்திற்கு 61,800 மெட்ரிக் டன் இலவச அரிசியை சப்ளை செய்ய உள்ளது. மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கான இலவச அரிசி டெண்டர் இன்று திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ