உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா துவங்க அரசு... தீவிரம்:சோகோ நிறுவன தலைவருடன் நமச்சிவாயம் சந்திப்பு

புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா துவங்க அரசு... தீவிரம்:சோகோ நிறுவன தலைவருடன் நமச்சிவாயம் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஐ.டி., பூங்காவை கொண்டு வருவதற்கான பணிகளை மீண்டும் புதுச்சேரி அரசு வேகப்படுத்தி வருகிறது.இதற்காக சோகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கல்விக் கேந்திரமாக திகழும் புதுச்சேரியில் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு பஞ்சமில்லை. தொழில்நுட்ப பல்கலைக்கழகமே இங்கே அமைந்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் பொறியியலில் ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளும் உள்ளன. ஏராளமான கலை, அறிவியல் கல்லுாரிகளும் உள்ளன. ஆண்டுதோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொறியியலில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி., படிப்புகளை படித்து வௌியே வருகின்றனர். ஆனால், புதுச்சேரியில் வேலைவாய்ப்புகள் இல்லாததால், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. புதுச்சேரியில் வேலைவாய்ப்பு என்பது அரிதாகவே உள்ளது. இதனால் தான் அரசு பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து விடுகிறது. அரசு வேலை என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை. எனவே, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தோ அல்லது ஐ.டி., தொழிற்சாலைகளை கொண்டு வந்தோ படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கு புதுச்சேரி ஆட்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டும். ஐ.டி., பூங்கா என்பது கானல் நீராகவே உள்ளது. தற்போதைய என்.ஆர்.காங்., - பா.ஜ.,. கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல், ஐ.டி., பூங்கா கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும், செயல்வடிவம் பெறாமலே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் ஐ.டி., பூங்கா கொண்டு வந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதில் தொழில்துறை அமைச்சரான நமச்சிவாயம் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரபல ஐ.டி., நிறுவனமான சோகோ நிறுவனத்துடன் தற்போது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் நமச்சிவாயம் இரண்டாவது முறையாக தென்காசிக்கு சென்று, அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவை நேற்று சந்தித்து புதுச்சேரியில் ஐ.டி., தொழில் பூங்கா ஆரம்பிக்க முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், 'புதுச்சேரியில் திறமையான இளைஞர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், புதுச்சேரியில் ஐ.டி., பூங்காக்கள் இல்லாததால் வெளி மாநிலங்கள், வெளியூர்களுக்கு சென்று குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். எனவே, புதுச்சேரியில் இந்த முறை ஐ.டி., பூங்கா கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான முதலீடு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஒருபடி தான் சோகோ நிறுவனருடன் சந்திப்பு. கண்டிப்பாக ஐ.டி., பூங்கா கொண்டு வந்து, திறமையான புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம்' என்றார். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை நிலத்தடி நீரை பாதிக்காத, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு ஒரே ஒரு தீர்வு ஐ.டி., தொழிற்பூங்கா கொண்டு வருவது மட்டுமே. எனவே விரைவாக ஐ.டி., தொழில் பூங்காவை அமைக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ