உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மின்சார பஸ், மின் ஆட்டோ சேவை: கவர்னர், முதல்வர் கொடியசைத்து துவக்கி வைப்பு

புதுச்சேரியில் மின்சார பஸ், மின் ஆட்டோ சேவை: கவர்னர், முதல்வர் கொடியசைத்து துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகர மின்சார பஸ்கள் மற்றும் மின் ஆட்டோக்கள் கொடியசைத்து இயக்கி வைக்கப்பட்டதுடன், 15 ஸ்மார்ட் நிழற்குடைகள் திறந்து வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் மின்சார நகர பஸ்கள், மின்சார ஆட்டோக்கள், சார்ஜ் பணிமனை மற்றும் ஸ்மார்ட் நிழற்குடை துவக்க விழா தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள மின் வாகன பணிமனையில் நேற்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து மின்சார பஸ்கள் மற்றும் மின்சார ஆட்டோக்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து போக்குவரத்து முன்பதிவு செய்யும் செயலியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் ஸ்மார்ட் நிழற்குடையை திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., தலைமை செயலர் சரத்சவுகான், நிதித்துறை செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மின்சார பஸ்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி நிதியை ஒதுக்கி 25 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. 10 ஏ.சி.., பஸ்கள், 15 ஏ.சி., வசதி இல்லாத பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. பஸ்சில் 36 பேர் அமர்ந்தும், 15 பேர் நின்று பயணிக்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒப்பந்த முறையில் இந்த பஸ்களை இயக்க ஐதாராபாத்தை சேர்ந்த இவே டிரான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒதுக்கிய நிதி, பயணிகள் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய், அரசின் இடைவெளி நிதி ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஸ்மார்ட் நிழற்குடைகள்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடியில், 15 ஸ்மார்ட் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பஸ் நிறுத்துமிடங்களின் பெயர், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, நகர வரைபடம், எல்.இ.டி., காட்சி, ஒளிரும் விளம்பரப் பலகைகள், நிலையான விளம்பர பலகைகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதி, மொபைல்போன் சார்ஜிங், , சி.சி.டி.வி. கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த திட்டத்திற்கான ஒப்பந்ததாரராக சென்னையின் ஸ்கைராம்ஸ் வெளிப்புற விளம்பர இந்தியா பிரைவேட் லிமிடெட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மின்- ஆட்டோக்கள்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.96 லட்சம் நிதியுடன் போக்குவரத்துத் துறை 38 மஹிந்திரா ட்ரியோ யாரி மின்-ஆட்டோக்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டது. மின் ஆட்டோக்களை சுய உதவிக்குழு பெண்கள் மூலம் இயக்க, போக்குவரத்துத் துறை புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பாரம்பரிய தெரு, கோவில், தேவாலயம் மற்றும் கலாசார முக்கிய இடங்களை உள்ளடக்கிய மின் ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளது. ஆட்டோ சவாரி செயலி சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 2 மணி நேரம், 4 மணிநேரம், 8 மணி நேர வாடகை மாதிரியிலும், தினசரி பயணிகளுக்கான குறுகிய தூர உள்ளூர் பயணிகள் போக்குவரத்து மாதிரியிலும், ஆட்டோ சவாரி செயலி 'ரைடு ெஹய்லிங்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விர்ச்சுவல்மேஸ் சாப்ட்ஸிஸ் பிரைவேட் லிமிடெட் டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரைடு ஹெயிலிங் செயலியை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ஓட்டுநர்களை அழைத்து, பயிற்சி அளிப்பர். மக்கள் சவாரிகளை முன்பதிவு செய்ய உதவுவர். புதுச்சேரியில் இதுபோன்ற செயலிகள் குறைவு. பொது மக்கள் மற்றும் பல்வேறு ஆட்டோ சங்கங்களின் தேவையின் அடிப்படையில், போக்குவரத்து முன்பதிவு விண்ணப்பத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ