| ADDED : டிச 27, 2025 05:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன் முக்கிய கோப்புகளுடன் டில்லி விரைந்துள்ளார். கவர்னர் கைலாஷ்நாதன், மத்திய அமைச்சர்களை சந்தித்து தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறார். அடுத்து அவர் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசவும் முடிவு செய்துள்ளார். என்ன காரணம் போலி மருந்து விவகாரம் தொ டர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கவர்னர் கைலாஷ்நாதன் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டாலும், மாநில வளர்ச்சி தொடர்பாக தான் இந்த அரசு பயணமாக கவர்னர் டில்லி விரைந்துள்ளார். கடந்த 10 நாட்களாகவே ஒவ்வொரு அரசு துறைகளில் உள்ள முக்கிய பிரச்னைகள், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள கோப்புகள் குறித்து கவர்னர் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் அரசு துறைகள் முழு வீச்சில் இந்த தகவல்களை திரட்டி கொடுத்தன. பிரதமர் மோடி ஜனவரியில் புதுச்சேரி வருகை தர உள்ள சூழ்நிலையில் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து பிரதமர் மோடி வாயிலாகவே அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் கவர்னர் டில்லி விரைந்துள்ளார். 29 ம் தேதி துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புதுச்சேரி வருகை தர உள்ளார். எனவே இன்று 27ம் தேதி அரசு பயணத்தை முடித்து கொண்டு கவர்னரும் புதுச்சேரி திரும்ப உள்ளார்.