உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வரலாற்று ரீதியாக காசியும் - -தமிழும் உறவு கொண்டவை கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

 வரலாற்று ரீதியாக காசியும் - -தமிழும் உறவு கொண்டவை கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு

புதுச்சேரி: பிரதமரின் அகஸ்தியர் முனிவர் வாகன பயண திட்டத்தின் கீழ், காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் பங்கேற்க தென்காசியில் இருந்து தஞ்சை வழியாக வாரணாசி செல்லும் குழு நேற்று புதுச்சேரி வந்தது. ஆனந்த இன் ஓட்டல் வந்த அவர்களை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின், நடந்த வழியனுப்பு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். இதில், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கவர்னர் செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்,- தமிழர் பெருமை, தமிழகம் - காசி வரலாற்று உறவு, தமிழ் வளர்ச்சியில் புதுச்சேரியின் பங்கு குறித்து அறிஞர்கள் உரையாற்றினர். முன்னதாக, பயணக் குழுவை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: புதுச்சேரி நிர்வாகியாக அல்லாமல், தமிழ் மொழியையும் பண்பாட்டையும் நேசிக்கும் ஒரு தமிழனாக காசி தமிழ் சங்கமம் விழாவில் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது. காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறி இருக்கிறது. காசி என்று சொன்னாலே பரம்பொருளின் அருளை பற்றிய நினைவு தான் முதலில் வரும். அப்படி ஒரு புனிதமான நகரம் காசி. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 46 ஆண்டுகளுக்கு பிறகு போய் இருந்தேன். கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் தோற்றம் அற்புதமானதாக இருக்கிறது. அதற்கான பெருமை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை சாரும். ஆன்மிகம் கடந்து வரலாற்று ரீதியாக காசியும் - தமிழும் உறவு கொண்டவை. காசி மக்களின் மொழியில், பண்பாட்டில் தமிழ் அடையாளங்கள் நுாற்றாண்டுகளாக பரவி கிடக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் அந்த தொடர்பு சில காரணங்களால் மங்கிப் போனது. இந்த வரலாற்று, பண்பாட்டு உறவை மீட்டு எடுப்பது தான் காசி தமிழ் சங்கமம். காசி தமிழ் சங்கமம் இன்றைய இந்தியாவின் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி. அந்த வரலாற்று உறவை உயிர்ப்பித்து கொடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை