உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் 243 கோவில் சொத்துக்கள்! ஜீரோ மதிப்பு கொண்டுவர கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் 243 கோவில் சொத்துக்கள்! ஜீரோ மதிப்பு கொண்டுவர கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள 243 கோவில்களின் சொத்து விபரங்கள் மற்றும் வாடகை இருப்போர் தகவல்களை கோவில் தகவல் பலகை மற்றும் இணையதளத்தில்வெளியிட வேண்டும். சித்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் இருப்பிடமான புதுச்சேரி, பல கோவில்கள் அமைய பெற்ற புண்ணிய பூமியாகும். பழமையும், புதுமையும் ஒருங்கே அமைய பெற்றுள்ளது. புதுச்சேரியின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில், காரைக்கால் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில், காந்தி வீதியில் வேதபுரீஸ்வரர், பாகூரில் மூலநாதசுவாமி, வில்லியனுாரில் திருக்காமீஸ்வரர் கோவில், காளதீஸ்வரர், வரதராஜபெருமாள் கோவில் என மொத்தம் 243 கோவில்கள் மற்றும் மடங்கள் உள்ளது. இக்கோவில்கள் நிர்வாகத்தை மேற்பார்வையிட, இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. இந்து சமய நிறுவனச் சட்டப்படி, சிறப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மூலம் கோவில்களை நிர்வகிக்கின்றனர். புதுச்சேரியில் உள்ள 243 கோவில்களுக்கும் பல ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் உள்ளது. கோவிலை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளுக்கே கோவிலுக்கு உரித்தான சொத்து விபரங்கள் தெரியாத அளவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது.இப்படி ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் இருந்தும், ஒரு வேலை பூஜைக்கும் , புனரமைக்க முடியாமல் பல கோவில்கள் உள்ளது. கோவில் சொத்துக்களை பல ஆண்டிற்கு முன்பு வாடகைக்கு பெற்றவர்கள், அந்த சொத்துக்களை தங்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விட்டனர். வாரிசுகள் அதில் தொழில் நிறுவனம், வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தொழில் செய்கின்றனர். புதுச்சேரி நகர பகுதியில், 10 அடிக்கு 10 அடி கொண்ட கடைக்கு ரூ. 10 ஆயிரம் வாடகை வசூலிக்கின்றனர். ஆனால், கோவிலின் நுாற்றுக்கணக்கான அடி நிலத்திற்கு மாதம ரூ. 15 வரி செலுத்துகின்றனர். அந்த பணத்தை கூட பலர் கோவிலில் செலுத்துவதில்லை. கோவில் சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது என்பதால், அதனை 'பகடி' உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். கோவிலில் தினசரி பூஜைகள் தடைபடாமல் நடப்பதிற்கும், கோவிலை புனரமைப்பதிற்கும், கடந்த காலங்களில் வாழ்ந்த பெரியவர்கள் தங்களின் சொத்துக்களின் ஒரு பகுதியை கோவிலின் பெயரில் எழுதி வைத்தனர்.ஆனால் அந்த நோக்கம் தற்போது முற்றிலும் சுக்குநுாறாக உடைந்து விட்டது. கோவில் நிலங்கள் அனைத்தும் அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகரிடம் வசம் உள்ளது. சமீபத்தில் காமாட்சியம்மன் கோவில் நிலம் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு பின்பு கைப்பற்றப்பட்டது.அதுபோல் கோர்காடு விநாயகர் கோவில் நிலத்திற்கும் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் கோவில் சொத்துக்கள் மூலம் கோவிலுக்கு வருமானம் வரும் வழியை இந்து அறநிலையத்துறை உருவாக்க வேண்டும். 243 கோவிலின் சொத்துக்கள், அதில் வசிப்பவர், விவசாயம் செய்வோர், தொழில் செய்பவர், ஆண்டு வாடகை, பல ஆண்டுகளை வைத்துள்ள வாடகை பாக்கி உள்ளிட்ட விபரங்களை கோவில் தகவல் பலகை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோவில் சொத்துக்களை 2 ஆண்டிற்கு ஒரு முறை ஏலம் முறையில் வாடகைக்கு விட ஏற்பாடு செய்தால், கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ