| ADDED : ஜன 06, 2024 05:12 AM
பாகூர் : அதிவேகத்தில் வலைந்து சென்ற தனியார் பஸ்சில் இருந்து, கல்லுாரி மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த எழுமேடு ரெட்டியார் வீதியை சேர்ந்தவர் தேவநாதன் மகள் புனிதவள்ளி 21; இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் பிசியோதெரபி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக, கடலுார் செல்லும் பிஒய் 01 சிஜி 4959 என் பதிவெண் கொண்ட தனியார் பஸ்சில் ஏறி உள்ளார். பஸ், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே சென்ற போது, பேரிகார்டு வைத்துள்ள பகுதியில் அதிவேகமாக வலைந்து சென்றது. இதில், பஸ்சின் பின்புறத்தில் நின்று பயணம் செய்த மாணவி, புனிதவள்ளி, நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல், கடலுார் பனங்காட்டு காலனியை சேர்ந்த பஸ் டிரைவர் சத்தியநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.