அநாகரீகமாக நடந்து கொண்டதாக போலீசார் மீது பட்டதாரி பெண் புகார்
புதுச்சேரி : மாகியில் சிறப்பு பிரிவு போலீசார் இரண்டு பேர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக போலீசார் மீது பட்டதாரி பெண் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாகே பள்ளூரைச் சேர்ந்த சுனித்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலம், மாகி பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான நான், பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்திருந்தேன். இதற்காக என்னை மாகி சிறப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்தனர்.அங்கு விசாரணைக்கு சென்றேன். அங்கிருந்த ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர் மனோஜ் ஆகியோர் பாஸ்போர்ட் விசாரணைக்காக தலா 500 ரூபாய் கொடுத்தால், உடனடியாக பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தேன். பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ஏட்டு ராதாகிருஷ்ணன் கேட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு பாஸ்போர்ட் தேவையில்லை எனக் கூறிவிட்டு வெளியே வர முயன்றேன். அப்போது, என்னை இருவரும் சேர்ந்து கையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளியதோடு மட்டுமல்லாமல், ஆபாசமாக பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டனர். எனது கல்வி சான்றுகளையும் என் முகத்தில் தூக்கி வீசினர். இது தொடர்பாக மாகி போலீசில் புகார் அளித்தும் எந்தவித பயனுமில்லை. எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் சம்பத், சுரேஷ் ஆகியோர் மூலம் மனு தாக்கல் செய்துள்ளேன். மேலும், கவர்னர், தலைமை செயலர், ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து புகார் அளித்துள்ளேன் என்றார்.