உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்வு; 14,086 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 14 ஆயிரம் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, எழுதினர்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. புதுச்சேரி பகுதியில், 31 மையங்களில் நடந்த தேர்வில், 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 11 ஆயிரத்து, 856 பள்ளி மாணவர்கள், 230 தனித்தேர்வர்கள், பங்கேற்றனர்.காரைக்காலில், 9 மையங்களில் நடந்த தேர்வில், 11 அரசு மற்றும் 17 தனியார் பள்ளிகளை சேர்ந்த, 2 ஆயிரத்து 152 பள்ளி மாணவர்களும், 41 தனித்தேர்வர்களும் கலந்து கொண்டனர். இந்த தேர்வில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆர்வத்துடன் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதினர். முன்னதாக, காலையில் மாணவ - மாணவியர், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை முடித்து விட்டு, தேர்வு மையங்களுக்கு வந்தனர்.தேர்வு மையங்களுக்கு, மாணவர்கள் மொபைல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கூட அனுமதி சீட்டு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.தேர்வு அறை மற்றும் மையத்தில், ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இந்த தேர்வு வரும், 22ம் தேதி வரை தொடர்ந்து நடக்க உள்ளது.

கலெக்டர் ஆய்வு

லாஸ்பேட்டையில், அரசு நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் குளுனி பள்ளி தேர்வு மையங்களை, கலெக்டர் குலோத்துங்கன், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனைத்து தேர்வு மையங்களையும், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கண்காணித்தனர்.

முதல் நாள் தேர்வில் 193 பேர் ஆப்சென்ட்

புதுச்சேரி பகுதியில், தமிழ் தேர்வில் 126; பிரெஞ்சு தேர்வில் 10 மற்றும் இந்தி தேர்வில் 1, என மொத்தம், 137 மாணவ - மாணவியர் தேர்வில், 'ஆப்சென்ட்' ஆகினர். அதேபோல, தனித்தேர்வர்களில், 16 பேர் தேர்வெழுத வரவில்லை. காரைக்கால் பகுதியில், தமிழ் 34; பிரெஞ்சு 1; ஹிந்தி 1; என மொத்தம், 36 பேர், ஆப்சென்ட் ஆனார்கள். தனித்தேர்வர்களை பொருத்தவரை, 4 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மொத்தத்தில், முதல் நாள் தேர்வில், 193 பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை