உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் குடியரசு தின விழா கோலாகலம்! கவர்னர் தமிழிசை தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரியில் குடியரசு தின விழா கோலாகலம்! கவர்னர் தமிழிசை தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் நாட்டின் 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணக்கோலம் பூண்டியிருந்தது.காந்தி திடலின் கீழ் கொடிக்கம்பத்துடன் விழா மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10:14 மணிக்கு கவர்னர் தமிழிசை மேடைக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் ராஜிவ்வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ் ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து, கவர்னர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றினார். பின், கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஜனாதிபதி பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம், கவர்னரின் பதக்கம் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

100 சதவீத தேர்ச்சி

தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த 20 பள்ளிகளுக்கு முதல்வர், கல்வி அமைச்சரின் சுழற்கேடயம், பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 32 பள்ளிகளுக்கு புதுச்சேரி பேராயர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2ம் இடத்தில் தேர்ச்சி பெற்ற புதுச்சேரி சாரதாம்பாள் நகர் செயின்ட் பேட்ரிக் பள்ளி, பிளஸ் 2 பொது தேர்வில் 2ம் இடத்தில் தேர்ச்சி பெற்ற மடுகரை வெங்கடசுப்பாரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கல்வி அமைச்சரின் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.

சிறந்த அரசு பள்ளிகள்

புதுச்சேரி பகுதியில் கல்வி மற்றும் கல்வி திட்டம் சாரா செயல்களில் சிறந்து விளங்கிய வாதானுார் சாராதேவி அரசு உயர்நிலைப்பள்ளி, அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு அரிமா சங்க உறுப்பினர் பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

சாலை போக்குவரத்து பணி மாணவர்களுக்கு பரிசு

சிறந்த சாலை போக்குவரத்து பணிக்காக பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மாணவர் மவுலீஸ்வரருக்கு முதல் பரிசு, விவேகானந்தா பள்ளி மாணவர் மோகனவாசனுக்கு 2ம் பரிசு, தேங்காய்திட்டு ஏகலைவா பள்ளி மாணவர் தஷ்வர்ன் டிமிடிஸ்க்கு 3ம் பரிசு வழங்கப்பட்டது.திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதா, ஆச்சார்யா பள்ளி மாணவிகள் வர்ஷிதா, கீர்த்தனா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

அம்பேத்கர் நினைவு பரிசு

புதுச்சேரி பிராந்திய அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவர்கள் மதுமிதா, ஹரிபிரசாந்த், பிரசன்னா, பிரதீபா ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

சிறப்பான சேவை

மாற்றுத்திறனாளிகளின் சிறப்பான சேவையை பாராட்டி பூங்குழலி, நாராயணன், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு புதுச்சேரி அரசின் சமூகநலத்துறை விருது வழங்கப்பட்டது.

அணிவகுப்பு

தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவினர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர்கள், சாரணர், சமுதாய நலப்பணித்திட்டம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.

அலங்கார வாகனம்

இதன்பின் ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு, குடிமைப்பொருள் வழங்கல், தீயணைப்பு, சுகாதாரம், தொழில், உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி, சமூகநலம் ஆகிய துறைகளின் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம். அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ஆறுமுகம், அனிபால் கென்னடி, பாஸ்கர், கல்யாணசுந்தரம், லட்சுமிகாந்தன், நேரு, பிரகாஷ்குமார், ராமலிங்கம், ரமேஷ், வெங்கடேசன், சம்பத், சிவசங்கர், ரிச்சர்டு, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கலெக்டர் வல்லவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை