| ADDED : பிப் 17, 2024 05:35 AM
புதுச்சேரி, : நகரில் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட 15 குழந்தைகள் மீட்கப்பட்டு,அவர்களின் பெற்றோர்,பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.புதுச்சேரி சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டுனர்களிடம் குழந்தையுடன் வந்து பிச்சை எடுப்பதும், வாகனங்களை தட்டி பொருட்களை விற்க முயல்வதும் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.இதனையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு, சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி சார்பில் இனைந்து தெரு குழந்தைகள் மற்றும் யாசகம்யாசகம் எடுப்போரை 3 வாகனங்களில் சென்று மீட்கும் பணியை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், துணை கலெக்டர் வினையராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். புதுச்சேரி குழந்தைகள் நலக் குழு தலைவர் சிவசாமி உடனிருந்தார். தொடர்ந்து, புதுச்சேரி கடற்கரை, புது பஸ்டாண்ட், ரயில் நிலையம், ஜிப்மர் உள்பட 10 இடங்களில் 22 குழந்தை நலக் குழு தன்னார்வலர்கள் பிரிந்து குழந்தைகளுடன் பிச்சை எடுத்தவர்களை மடக்கி விசாரித்தனர்.இதில் ஒன்றரை மாத குழந்தை முதல் 17 வயது வரை உள்ள 15 குழந்தைகள் 10 பேரிடமிருந்து மீட்கப்பட்டனர். கடற்கரை சாலையில் சாட்டை அடித்துக்கொண்டு குழந்தைகளுடன் பிச்சை எடுத்த கும்பலை குழந்தைகள் நலக் குழு தலைவர் சிவசாமி தலைமையிலான குழுவினர் மடக்கிப்பிடித்தனர். இதில் நகர்ப்புற வீடு அற்றவர்களுகான காப்பகத்தில் 3 பேர் சேர்க்கப்பட்டனர்.மற்றவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வந்திருந்தால் அவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்த மாநில குழந்தை நல குழுவிடம் தெரிவித்தனர்.பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. குழந்தை நலக் குழு தலைவர் சிவசாமி கூறும்போது,குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது சட்டப்படி தவறு.எனவே பிச்சையெடுக்கப்படும் குழந்தைகளை மீட்டு,அவர்களின் மறுவாழ்விற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.