| ADDED : ஜன 12, 2024 03:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய மக்களுக்கான 'நீதி கேட்டு நெடு பயணம்' என்ற நடைபயணத்தை காங்., கமிட்டி வரும் 14ம் தேதி துவங்குகிறது. மணிப்பூர் மாநிலத்தில் துவங்கி, மஹாராஷ்ரா மாநிலம் மும்பையில் முடிகிறது. இதில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். தேசிய காங்., தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்று துவக்கி வைக்கின்றனர்.புதுச்சேரி வருமான வரித்துறையில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் கூறியவர் என 4 பேரை கைது செய்துள்ளனர்.இதற்கு புதுச்சேரி அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் தர வேண்டும். அதிகமான வரிகள் விதிக்கப்பட்ட மாநிலம் புதுச்சேரி. ஆனால் மிக குறைவான வரி வருமானத்தை பெறக்கூடிய மாநிலமும் புதுச்சேரி தான்.அதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்குள்ள ரெஸ்டோ பார்களில் விற்கும் மது பானங்களுக்கு உண்மையான வரி கட்டப்பட வில்லை.தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை எந்த தொழில் முதலீட்டாளரும் புதுச்சேரிக்கு வரவில்லை. அமைச்சர் பதவியேற்ற பிறகு சேதராப்பட்டில் உள்ள நிலங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துவிட்டார்.போலியான தொழில் முனைவோர் என்று சொல்பவர்கள் மீது அந்த இடங்களை பதிவு செய்து உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையான தொழில் முனைவோர் வந்தால் அவர்களுக்கு தருவதற்கு இடங்கள் இல்லை. இதனால் தான் தொழில் முதலீட்டாளர்களை அழைக்காமல் இருக்கின்றனர் என்றார்.பேட்டியின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.