உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெரியாது என்று தெளிந்தால் தான் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

தெரியாது என்று தெளிந்தால் தான் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 22ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:22ம் பாசுரமும் கண்ணனைத் துயிலெழுப்பும் பாசுரமாக ஆண்டாள் அருளியுள்ளாள்.எல்லாரும் துயிலெழுந்து விட்டனர்.ஆனால், பரமனாகிய கண்ணபிரான் இன்னும் துயிலெழவில்லையே என்ற ஆண்டாளின் ஆதங்கம் இந்தப் பாசுரத்தில் எதிரொலிப்பதை காணலாம்.அத்தகைய பக்தி நிலை அடைய, நமது, நான், எனது போன்ற அகங்காரங்கள் அழிந்து, நான் ஒன்றும் இல்லை. எல்லாம் அவனே என்ற உண்மையை உணர்கின்ற இந்த பக்தி நிலை தான் இந்த பாசுரத்தின் உட்பொருளாக உள்ளது.இதுவரை நான், என் உடைமை என் மக்கள், என் நாடு என்றெல்லாம் அபிமானித்துக் கொண்டிருந்த, மிகுந்த வலிமை வாய்ந்த, சிற்றரசர்களும் பேரரசர்களும் தமது சுயம் அழிந்து கண்ணனிடம் வந்து சேர்ந்தனர்.அதுபோல் கோபியரும் தங்களின் கையறு நிலையை முழுமையாக உணர்ந்து, தாங்கள் இதுவரை சம்பாதித்துள்ள தீவினைகளையும், சாபங்களையும் போக்க வல்லவன் கண்ணனே என்று உறுதியாக நம்பி, அவனை சரணடைகின்றனர் என்பதை இந்த பாசுரம் உணர்த்துகிறது.ஆத்மதத்வங்களின் வரிசையில் அகங்காரம் என்பது 22வது தத்துவம். அபிமானம் என்பது அகங்காரத்தை குறிப்பதாம். இந்த 22வது பாசுரம் அபிமான பங்கத்தை பற்றிப் பேசுகிறது. எல்லாம் தெரியும் என்று நினைப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது.தெரியாது என்று தெளிந்தால் தான் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும் என்ற கேன உபநிடத வாக்கியத்தை உட்பொருளாக வைத்து ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் சரணாகதி தத்துவத்தை சொல்கிறாள்.அனைத்திற்கும் உடையவன் எம்பெருமானே என்ற உணர்வில், நான் என்ற அகங்காரம் அழிய உன்னை அடிபணிந்தோம் என்று அபிமான பங்கமாய் வந்து என்றருளினாள் ஆண்டாள்.திருப்பாவையின் 22வது பாசுரத்தை தினமும் பாராயணம் செய்தால், நாம் செய்த பாவங்கள் அத்தனையும், பரமனின் திருவருளால் தீயுனுள் துாசாகக் கரைந்து போகும்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை