புதுச்சேரி : புதுச்சேரியில், காலாவதியான பீர் பாட்டில்களை விற்பனை செய்த மதுபான கடை, ரூ.75,240 இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, வேல்ராம் பேட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர், கடந்த, 2021,ம் ஆண்டு, லாஸ்பேட்டை, கொட்டுபாளைம், இ.சி.ஆரில் உள்ள, ஒரு தனியார் மதுபான விற்பனை கடையில், 6 பீர் பாட்டில்களை வாங்கினார். அதில், 2 பீர் பாட்டில்கள் காலாவதியாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, புதுச்சேரி அரசு உணவு பாதுகாப்பு துறையில், காலாவதியான பீர் பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார். அந்த சோதனை முடிவின் அடிப்படையில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர் மற்றும் மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் மீது, நஷ்ட ஈடும், கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கு விசாரணை முடிந்து, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு அமர்வு தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் நேற்று தீர்ப்பு வழங்கினர். அதில், தனியார் மதுவிற்பனை கடை காலாவதியான மது விற்பனை செய்ததை உறுதி செய்து, 2 பீர் பாட்டில்களுக்கு உண்டான, ரூ.240 மற்றும் முறையற்ற வணிகம், சேவை குறைபாட்டிற்காக, ரூ.50,000 நஷ்ட ஈடு வழங்க, உத்தரவிட்டது. மேலும், மனுதாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு, ரூ.20,000 மற்றும் வழக்கு செலவு தொகையாக, ரூ.5000, என மொத்தம், ரூ.75,240 வழங்க தனியார் மதுபான கடைக்கு உத்தரவிட்டனர்.