புதுச்சேரியை சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், அரசிடம் இருந்து எந்தவித உதவித் தொகையும் பெறாத, 21 வயதிற்கு மேல், 55 வயதிற்குள் இருக்கும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகள் பயனடைய முடியும்.இதற்காக, அரசு துறைகளில் உதவித் தொகை பெறாத, 21 - 55 வயதிற்குட்பட்ட பயனாளிகள் குறித்த விபரங்கள், தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த சுமார் 70 ஆயிரம் பெண்களுக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.பிறகு, திட்டத்தின் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் பெற்று உதவித் தொகையை வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பம் பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கடந்த டிசம்பர் மாதம் வரை, மொத்தம் 41 ஆயிரத்து 110 பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது.விடுபட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள, 21 - 55 வயதிற்குட்பட்ட, தகுதிவாய்ந்த பெண்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவதற்கு, முதல்வர் ரங்கசாமியும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இதையடுத்து, அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக விடுபட்ட பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விபரங்களை சேகரித்துள்ளனர். இதன்படி, 19 ஆயிரம் பயனாளிகளின் விபரங்கள் தகுதியானவர்களாக சேகரிக்கப்பட்டுள்ளது.இவர்களிடம், 'தாங்கள் எந்த உதவித் தொகையையும் அரசிடம் இருந்து பெறவில்லை, வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கிறோம்' என்ற சுய உறுதிமொழியை பெற்று ரூ.1000 உதவித் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் மார்ச் மாதத்தில் இருந்து புதிய பயனாளிகளுக்கும் உதவித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள, 21 - 55 வயதிற்குட்பட்ட, தகுதிவாய்ந்த பெண்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவதற்கு, முதல்வர் ரங்கசாமியும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர், அமைச்சர் நடவடிக்கை