உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கடலுக்கு அடியில் அலைகளின் தாலாட்டில் உறங்கும் புதுச்சேரியின் 2.5 கி.மீ., வரலாற்று சுவடு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...

 கடலுக்கு அடியில் அலைகளின் தாலாட்டில் உறங்கும் புதுச்சேரியின் 2.5 கி.மீ., வரலாற்று சுவடு அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...

க டல் அலைகளுக்குள் எத்தனையோ நாகரிகங்கள் பிறந்து, வளர்ந்து, மறைந்து விட்டன. அந்த மறைந்த நகரங்களின் மவுனமான கதைகளையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கவும் ஒவ்வொரு நாடும் முயல்கின்றன. அத்தகைய ஒரு வர லாற்றுத் தேடலின் மையமாக இன்றைக்கும் புதுச்சேரி கடல் திகழ்கிறது. சங்க இலக்கியங்களில் பெருமையாக பேசப்படும், காவி ரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார் கடலில் மூழ்கியது என்பது இன்று வரலாற்று உண்மையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பூம்புகார் மட்டுமல்ல; அதனுடன் சமகாலத்தில் திகழ்ந்த பல துறைமுக நகரங்களும் அதே கடல் கொந்தளிப்பில் மறைந்திருக்கலாம் என்ற கருத்து நீண் ட காலமாக வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவி வருகிறது. அந்த வரிசையில் முக்கியமாகக் கருதப்படுவது - சங்ககாலத் துறைமுகமான பு துச்சேரியின் பொதுக்கே. பூம்புகாரின் சமகால நகரமாகக் கருதப்படும் பொதுக்கேவும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில், இந்தியத் தொல்பொருள் துறை 2007ம் ஆண்டு புதுச்சேரி கடற்பகுதியில் ஒரு கடலாய்வை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆய்வின் முழுமையான அறிக்கைகளோ, தெளிவான தரவுகளோ இன்று வரை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிவரவில்லை. அதனால் பொதுக்கே என்பது இலக்கியங்களில் வாழ்ந்த ஒரு பெயராக மட்டுமே நீண்ட காலம் இருந்தது. கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மதில் இந்த மவுனத்தை உடைத்ததுள்ளது. இது ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. புதுச்சேரியில் டெம்பில் அட்வென்சர் என்ற 'ஸ்கூபா டைவிங்' பள்ளியை நடத்தி வரும் அரவிந்த், தனது மாணவர்களுடன் கடலுக்குள் பயிற்சி மேற்கொண்டபோது, கரையிலிருந்து சுமார் 16 கி.மீ., தொலைவில், 42 மீட்டர் ஆழத்தில், கடலின் அடியில் பரந்து விரிந்த ஒரு பிரமாண்டமான நீண்ட மதிற்சுவரைக் கண்டுள்ளார். அந்தக் காட்சி, கடலுக்குள் மூச்சை நிறுத்தும் அதிசயம் போல இருந்தது. 2.5 கி.மீ., துாரமுள்ள அந்த மதில், காலத்தின் கொடுமையையும் கடலின் தாக்குதலையும் தாங்கி இன்றும் நிமிர்ந்து நிற்பது போலத் தோன்றியது. அதன் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்துவாரம் வரையிலும், மற்றொரு பகுதி புதுச்சேரியின் எல்லையிலுள்ள நரம்பை பகுதி வரையிலும் நீள்கிறது. அந்த மதிலுக்கு அருகே, மரக்கலங்கள் சென்று வரக்கூடிய வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தடயங்களும் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அந்த மதில் ஒரு கோட்டையின் சுவராகவோ அல்லது கடல் நீர் தடுப்புச் சுவராகவோ இருந்திருக்கலாம் என, அரவிந்த் கருத்து தெரிவித்தார். அந்தக் கண்டுபிடிப்புக்கு அவர் தந்த பெயர் 'அரவிந்த் வால்'. தாலமியும், பிளினியும் தங்கள் வரலாற்றுக் குறிப்புகளில், காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து பொதுக்கே, அதனையடுத்து சோபட்டனம் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட இந்த மதில் சோபட்டனம் ஆக இருக்க முடியாது என்பது தெரிய வருகிறது. சோபட்மா எனப்படும் எயிற்பட்டினம் இன்றைய மரக்காணம் பகுதி என்பதைக் குறித்து இலக்கியச் சான்றுகளும், அகழ்வாய்வு ஆதாரங்களும் தொல்லியலாளர்களால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகவே, காவிரிப்பூம்பட்டினத்துக்கும் சோபட்மாவுக்கும் இடையில் இருப்பதாகக் கூறப்படும் பொதுக்கே என்ற துறைமுகத்துடன் இந்த மதில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருத்து மேலும் வலுப்பெறுகிறது. இதுவரை கற்பனையிலும், இலக்கியங்களிலும் மட்டுமே வாழ்ந்த பொதுக்கே, இந்த மதிலின் மூலம் முதல் முறையாக கடலின் அடியில் இருந்து தன் இருப்பை அறிவித்திருக்கிறது. இது கடலில் மூழ்கிய பொதுக்கே துறைமுகத்தின் முதல் தொல்லியல் தடயமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த புதுச்சேரி கடற்பகுதியில், இந்தியக் கடல்சார் தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து, திட்டமிட்ட மற்றும் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டால், சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்படாத பொதுக்கே துறைமுகம் பற்றிய பல அரிய உண்மைகள் வெளிப்படும். அந்த ஆய்வுகள் மூலம், பொதுக்கே என்பது ஒரு சிறு துறைமுகம் அல்ல; அது ஒரு நகர நாகரிகம், கடல் வணிகத்தின் மையம், தமிழரின் தொழில்நுட்ப அறிவின் சாட்சி என்பதும் நிரூபிக்கப்படும். அப்போது கடலின் அடியில் மறைந்திருந்த பொதுக்கே, மீண்டும் வரலாற்றின் மேடையில் தலை நிமிர்ந்து நிற்கும். புதுச்சேரி கடல் இன்று மவுனமாக கரையில் மோதி விளையாடி கொண்டு இருக்கலாம். ஆனால் அதன் அடியில், புதுச்சேரியின் பெருமை இன்னும் உயிரோடு இருக்கிறது. அதை வெளிக்கொணர வேண்டியது - புதுச்சேரி அரசின் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை