| ADDED : ஜன 20, 2024 06:26 AM
நெட்டப்பாக்கம் : மூதாட்டியிடம் செயினை பறித்த வடலுார் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கல்மண்டபம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 85; இவர் கடந்த 31ம் தேதி காலை வீட்டு வாசலில், இரும்பு கேட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவரில், ஒருவர் இறங்கி வந்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி கையில் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் பாதி செயினை அறுத்துக் கொண்டு, தயாராக இருந்த பைக்கில் தப்பிச் சென்றார்.புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீரத்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில், மூதாட்டியிடம் செயின் பறித்த கடலுார் மாவட்டம், வடலுாரை சேர்ந்த கவுதம்,38; என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த இரண்டரை சவரன் செயினை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.