| ADDED : ஜன 23, 2024 04:53 AM
புதுச்சேரி :புதுச்சேரி போலீஸ் ஆட்கள் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.புதுச்சேரியில் கான்ஸ்டபிள் தேர்வின்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 33 பேர் மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு தேர்வான 16 பேருக்கு, பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கோரிமேடு காவலர் சமுதாய நல கூடத்தில் நேற்று நடந்தது.போலீஸ் டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பணி ஆணை வழங்கி பேசினார்.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில்; அரசு பொறுப்பேற்ற பின்பு போலீசில் நீண்ட காலமாக நிரப்படாமல் இருந்த காலி பணியிடங்கள், பதவி உயர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறோம்.டிரைவர்கள் 16 பேர், காத்திருப்போர் பட்டியலில் இருந்த 33 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 500 ஊர்காவல் படையினர் தேர்வு செய்ய உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது. 61 சப்இன்ஸ்பெக்டர்கள் நேரடி நியமனம் மூலமும், டெக் ஹெண்டலர், கடலோர காவல் பிரிவில் 200 ஊர்காவல்படையினர் எடுக்கப்பட உள்ளனர்.போலீசார் மற்றும் ஐ.ஆர்.பி.என்.களுக்கும் பதவி உயர்வு வழங்கி உள்ளோம்.போலீஸ் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் சிறந்த போலீஸ் துறையாக உருவாக வேண்டும்.சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அரசின் லட்சியம் எனப் பேசினார்.நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம், டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.