| ADDED : ஜன 09, 2024 07:13 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அரிசிக்கான மானியத்தை வெளிமார்க்கெட் விலைக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டுமென காங்., வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய, மாநில அரசு கள் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால், புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு உணவுப் பொருட்களுக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.மத்திய, மாநில அரசுகள் வங்கிகளில் செலுத்தும் பணம் அதை வாங்க போதுமானதாக இல்லை. மத்திய அரசு தானியத்திற்காக சிவப்பு ரேஷன் கார்டுகளை கொண்டுள்ள குடும்பத்திற்கு, மாதம் ரூ. 200 செலுத்துகிறது.மாநில அரசு மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ, சிவப்பு கார்டுக்கு 20 கிலோ அரிசி வழங்கி வந்தது. புதுச்சேரி அரசு அரிசி வழங்குவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசைப்போல் மானியம் வழங்கி வருகிறது. கிலோவிற்கு ரூ.30 என கணக்கிட்டு மஞ்சள் கார்டுக்கு ரூ.300, சிவப்பு கார்டுக்கு ரூ.600ம் மாதம் வழங்கி வந்தது. அதுவும் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே, ரேஷன் கடைகளை திறந்து மக்கள் விரும்பும்படி அரிசி வழங்க வேண்டும். இல்லையெனில், வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலைக்கு ஏற்ப, ஒரு கிலோவிற்கு ரூ.60 வீதம் மாதம் மஞ்சள் கார்டுக்கு ரூ.600, சிவப்பு கார்டுக்கு ரூ.1,200ம் என நிலுவை மாதத்திற்குரிய அரிசிக்கான பணத்தை முழுவதும் செலுத்த வழி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.