உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓரம் கட்டப்பட்ட வாஜ்பாய்; கொந்தளிப்பில் பா.ஜ.,  

ஓரம் கட்டப்பட்ட வாஜ்பாய்; கொந்தளிப்பில் பா.ஜ.,  

புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் களத்தில், இப்போது ஒரு பெயர் பலகை பெரிய புயலையே கிளப்பிக்கொண்டிருக்கிறது. லாஸ்பேட்டை ஹெலிபேட் அருகில், ரூ. 7 கோடி செலவில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம். கடந்த 2018-ல் திறக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கத்தில் 750 பேர் அமரும் பார்வையாளர் அரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ெஷட்டில், பேட்மிட்டன் என, அத்தனை விளையாட்டுகளுக்கும் சர்வதேசத் தரத்திலான வசதிகள் தயாராக இருக்கின்றன. மத்திய அரசு தன் பங்கிற்கு ரூ. 6 கோடியையும், புதுச்சேரி அரசு ரூ.1 கோடியையும் அள்ளித் தெளித்து உருவாக்கிய இந்த அரங்கத்திற்கு, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போலவே பளபளக்கும் அழகான பெயர் பலகையும் தயாரானது. ஆனால், அரங்கத்தின் முகப்பில் கெத்தாகத் தொங்க வேண்டிய அந்தப் பெயர் பலகை, பல மாதங்களாக வாசலின் ஓரத்தில் அனாதையாகக் கீழே கிடக்கிறது. எங்கள் தலைவரின் பெயரை இப்படி ஓரம் கட்டுவதா என, கொந்தளித்துப்போய் நிற்கிறார்கள் புதுச்சேரி பா.ஜ., வினர். பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கிற்கு அடல் பிகாரி வாஜ்பாய் பெயரை சூட்ட அமைச்சரவையில் முடிவு செய்து, கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அனைவர் கண்ணிலும் படும் மாதிரி பெயர் பலகையை உடனே மாட்டுங்கப்பான்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. ஆனா, அங்க இருக்கிற நிர்வாகிகள் கண்டுக்கவே இல்லை. முன்னாள் பிரதமரின் பெயர் பலகையை மாட்ட என்ன பிரச்னை இருக்க போகிறது. இனி பேச்சுவார்த்தைக்கு வேலையே இல்லை... கட்சி மேலிடத்துல பேசிட்டு அடுத்தக்கட்ட போராட்டக் களத்துல குதிக்கப் போறோம் என, கமலாலய வட்டாரத்தில் கொந்தளித்து வருகின்றனர். ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் விளையாட்டைத் தாண்டி, இப்போது இந்தப் பெயர் பலகை அரசியல் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை