வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் லிப்ட் வசதியுடன் புனரமைப்பு
புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், வம்பாகீரப்பாளையத்தில் உள்ள லைட் அவுஸ் மீது ஏறி நின்று கடற்கரையையும், நகரின் அழகையும் கண்டுகளித்து வந்தனர். சுமார் 145 அடி உயரம் கொண்ட இந்த 'லைட் அவுஸ்' உச்சிக்கு 247 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இதனால், பெரும் சிரமத்திற்கு உள்ளான சுற்றுலா பயணிகள், 'லைட் ஹவுசில்' 'லிப்ட்' வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்தனர்.அதனையொட்டி, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்து துறையின் ஒரு பிரிவான கலங்கரை விளக்கங்கள் இயக்க துறை சார்பில் 'லைட் ஹவுஸ்' உட்பகுதியில் புனரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதில் தற்போது, ரூ.1.5 கோடி மதிப்பில் 'லிப்ட்' வசதி ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 'லைட் ஹவுஸ்' பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணி முழுமையாக முடிந்த பிறகு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
ரேடார் பொருத்தம்
வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் உச்சியில், இந்திய கடலோர காவல்படை சார்பில் ரேடார் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தற்போது, லைட் ஹவுஸ் புனரமைப்பு பணி நடைபெறும் நிலையில், அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பழைய ரேடார் கருவியை, கடலோர காவல் படை நிர்வாகம் மாற்றிவிட்டு, நவீன ரேடார் கருவியை நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட ராட்சத கிரேன் மூலம், 'லைட் ஹவுஸ்' உச்சியில் பொருத்தப்பட்டது.