உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்

 விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம்: உப்பளம் மைதானத்தில் அனுமதிக்கலாம்

புதுச்சேரி: உப்பளம் மைதானம் போன்ற பெரிய இடங்களில் மட்டுமே, விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி தர வேண்டும். புதுச்சேரியில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்துள்ள போலீசார், ரோடு ஷோவுக்கு பதிலாக திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து அக்கட்சியினர் போலீசாரை அணுகி உள்ளனர். ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹெலிபேடு மைதானம் குறுகிய இடமாக இருப்பதால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவியும்போது நெரிசல் ஏற்படும் என்பதே மக்களின் அச்சமாக உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க போவதில்லை. கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் வாகனங்களில் திரண்டு வருவர் என்பது நிச்சயம். ஆனால், ஹெலிபேடு மைதானத்தில் போதுமான இடமும், அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், இந்த மைதானத்திற்கு செல்ல ஏர்போர்ட் சாலையும், கல்லுாரி சாலையும் மட்டுமே உள்ளது. குறுகலான இந்த இரு சாலைகளும் ஏற்கனவே வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இந்த சாலைகள் வழியாக, பொதுக்கூட்டத்துக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல வழியும் இல்லை; அவசரத்துக்கு விரைவாக வெளியேற வசதிகளும் இல்லை. வாகனங்களை பார்க்கிங் செய்யவும் போதுமான இடம் கிடையாது. விஜய் போன்ற பிரபலங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த உப்பளம் புதிய துறைமுக மைதானம் போன்ற பெரிய இடங்களே சரியாக இருக்கும். இதுபோன்ற இடங்களுக்கு எளிதில் வர முடியும். மேலும், பெரிய இடத்தில் நடத்தினால் நெரிசல் ஏற்படும் வாய்ப்புகளும் குறைவு. ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டபோது, உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் தான் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அவரும் ஹெலிகாப்டரில் வந்திறங்கி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சென்றார். அதுபோல, விஜய் பொதுக்கூட்டத்துக்கும் உப்பளம் மைதானம் வசதியாக இருக்கும். கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தால் அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் புதுச்சேரி போலீசார் அலசி ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் போலீசார் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும்...

மக்களின் சிரமத்தை குறைக்க

விஜய் பறந்து வரலாமே...

புதுச்சேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை பனையூரில் இருந்து த.வெ.க., தலைவர் விஜய் தனது பிரசார பஸ் அல்லது காரில் வந்தால் வழி எல்லாம் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக, குறுகிய வீதிகளை கொண்ட புதுச்சேரி நகரம் ஒட்டுமொத்தமாக முடங்கி விடும். காலாப்பட்டில் ஆரம்பித்து, புதுச்சேரி நகரம் வரை அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைவார்கள். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வரும் பஸ் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, ஜெயலலிதா பாணியில், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக விஜய் புதுச்சேரிக்கு வர வேண்டும். பொதுக்கூட்டம் முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றால், யாருக்கும் எந்த சிரமமும் ஏற்படாது. உப்பளம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு வசதியாக ஏற்கனவே ஹெலிபேடு அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை