உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  யார் சர்வே எடுத்தா நமக்கென்ன... கூலான முதல்வர்: குளிர்ந்த என்.ஆர்.காங்.,

 யார் சர்வே எடுத்தா நமக்கென்ன... கூலான முதல்வர்: குளிர்ந்த என்.ஆர்.காங்.,

புதுச்சேரியில் சமீபகாலமாக எல்லோருடைய மொபைல் எண்ணிற்கு ஒரு அழைப்பு வருகின்றது. மறுமுனையில் இனிய குரலில் பேசும் பெண்.. வணக்கம். வருகின்ற சட்டசபை தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றீர்கள்...என்.ஆர்.காங்., என்றால் ஒன்றை அழுத்தவும். காங்., என்றால் எண் இரண்டை அழுத்தவும். பி.ஜே.பி., என்றால் மூன்றை அழுத்தவும், தி.மு.க., என்றால் நான்கை அழுத்தவும், அ.தி.மு.க., என்றால் ஐந்தை அழுத்தவும், எல்.ஜே.கே., என்றால் ஆறினை அழுத்தவும், த.வெ.க., என்றால் ஏழு அழுத்தவும், இன்னும் முடிவு செய்யவில்லை என்றால் எண் எட்டினை அழுத்தவும், பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் ஒன்பதை அழுத்தவும் என்று சர்வே செய்யப்படுகிறது. இதோடு நிற்கவில்லை என்.ஆர்.காங்.,-பா.ஜ., அரசின் செயல்பாடு திருப்தி என்றால் ஒன்றை அழுத்தவும், இல்லையென்றால் இரண்டை அழுத்தவும் என்று சர்வே செய்யப்பட்டு வருகின்றது. இது தவிர முதல்வர், அமைச்சர்கள், ஆளும் கட்சி எம். எல்.ஏ.,க்கள் செயல்பாடு பற்றியும் தனித்தனியாகவும் சர்வே செய்யப்பட்டு வருகின்றது. இந்த சர்வேவை ஆளும் கட்சி தான் நடத்துகின்றது என்று பொதுமக்கள் பலரும் நினைத்திருந்த வேளையில், இங்கு தான் திடீர் திருப்பம். என்.ஆர்.காங்., கட்சி நிர்வாகிகளே இந்த ரகசிய சர்வே விவகாரம் குறித்து முதல்வரிடம் புகாராக கொண்டு சென்றுள்ளனர். நாம் சர்வே எடுக்க சொல்லவே இல்லை. ஆனால் நம்முடைய அரசினை பற்றி யாரோ மொபைலில் சர்வே எடுத்து மதிப்பெண் போடுறாங்க.... அதுவும் உங்களை பற்றி யும், உங்களது ஆட்சி பற்றியும் மொபைல் அழைப்பு மூலம் சர்வே செய்கின்றனர். இந்த சர்வே கால் ஏர்டெல் ஸ்பேம் கால் என்றே குறிப்பிட்டே வருகின்றது. எந்த எண்ணையாவது அழுத்தினால் சைபர் மோசடி கும்பல் கணக்கை காலி பண்ணிடுமோ என்ற வீண் பீதியும் மக்களுடையே பரவி வருகின்றது. இது தொடர்பாக சைபர் போலீசில் புகார் கொடுக்கலாமா என்று முதல்வரிடம் கேட்டனர். அதனை கேட்ட முதல்வர் ரங்கசாமி, ரொம்ப கூலாகவே இருந்தார். யார் சர்வே எடுத்தால் நமக்கு என்ன...மக்களுக்கு அறிவித்த அனைத்து நலத்திட்டங்களை செய்து கொடுத்துவிட்டோம். ஆட்சியின் செயல்பாடு பிடித்திருந்தால் ஒன்றை அழுத்த போகின்றனர். இல்லையென்றால் இரண்டை அழுத்த போகின்றனர். இதில் என்ன பிரச்னை. இந்த சர்வேயை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று ஒரே மூச்சில் சர்வே அரசியலை சாதாரண அழைப்பாக மாற்றிவிட்டார். அப்படியே, நீங்கள் போய் தேர்தல் பணிகளை செய்யுங்கள்... எல்லாவற்றை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள் என்று தனக்குகே உரிய பாணியில் சிரித்தப்படியே நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். அது சரி....அப்புறம் யார் தான் சர்வே எடுத்து இருப்பார்கள் என்று மண்டையை சொறிந்தபடியே கேள்வி எழுப்புகின்றனர் என்.ஆர்.காங்., நிர்வாகிகள். இது தான் இப்போது என்.ஆர்.காங்., கட்சியில் 'ஹாட் டாப்பிக்'காக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை