பெங்களூரு: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோலி அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோவ் (8) ஏமாற்றினார். பிரப்சிம்ரன் சிங் (25) ஓரளவு கைகொடுத்தார். லிவிங்ஸ்டன் (17) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் (45) நம்பிக்கை தந்தார். சாம் கர்ரான் (23), ஜிதேஷ் சர்மா (27) ஆறுதல் அளித்தனர். அல்ஜாரி ஜோசப் வீசிய கடைசி ஓவரில் சஷாங்க் சிங் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. சஷாங்க் (21), பிரார் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோலி அபாரம்
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு விராத் கோலி நல்ல துவக்கம் தந்தார். சாம் கர்ரான் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரி அடித்தார். ரபாடா 'வேகத்தில்' கேப்டன் டுபிளசி (3), கிரீன் (3) வெளியேறினர். அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய கோலி, ராகுல் சகார் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர் 31 பந்தில் அரைசதம் எட்டினார். ஹர்பிரீத் பிரார் 'சுழலில்' ரஜத் படிதர் (18), மேக்ஸ்வெல் (3) போல்டாகினர்.
கார்த்திக் கலக்கல்
அபாரமாக ஆடிய கோலி (77), ஹர்ஷல் படேலிடம் சரணடைந்தார். அனுஜ் ரவாத் (11) நிலைக்கவில்லை. பின் இணைந்த தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரர் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கார்த்திக், 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.பெங்களூரு அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (28), லாம்ரர் (17) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.
73 'கேட்ச்'
பீல்டிங்கில் அசத்திய பெங்களூருவின் விராத் கோலி, 'டி-20' அரங்கில் அதிக 'கேட்ச்' செய்த இந்திய 'பீல்டர்' பட்டியலில் ரெய்னாவை (172) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை 174 'கேட்ச்' செய்துள்ளார்.