ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் வலையில் இந்திய பேட்டர்கள் சிக்கினர். முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது. ஜெய்ஸ்வால் மட்டும் அரைசதம் கடந்தார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 302/7 ரன் எடுத்திருந்தது. ரூட்(106), ராபின்சன்(31) அவுட்டாகாமல் இருந்தனர்.ஜடேஜா 'நான்கு'நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ராபின்சன் அரைசதம் எட்டினார். 8 வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த நிலையில், ஜடேஜா பந்தில் ராபின்சன் (58) அவுட்டானார். அடுத்து வந்த சோயப் பஷிரை 'டக்' அவுட்டாக்கினார் ஜடேஜா. தொடர்ந்து அசத்திய இவர், ஆண்டர்சனையும் (0) வெ ளியேற்றினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் (122) அவுட்டாகாமல் இருந்தார்.இந்தியா சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.ஜெய்ஸ்வால் அரைசதம்இந்திய கேப்டன் ரோகித் சர்மா(2), ஆண்டர்சன் 'வேகத்தில்' வீழ்ந்தார். பின் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இணைந்தனர். ஆண்டர்சன் வீசிய 5வது ஓவரின் முதல் இரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஜெய்ஸ்வால், ராபின்சனின் 10 வது ஓவரிலும் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது, சுப்மன் (38) அவுட்டானார். ஜெய்ஸ்வால், அரைசதம் எட்டினார்.திடீர் சரிவுரஜத் படிதர்(17) கிடைத்த வாய்ப்பை மீண்டும் வீணடித்தார். ஹார்ட்லி ஓவரில் (36வது) அடுத்தடுத்து சிக்சர் அடித்த ஜடேஜாவை (12) பஷிர் அவுட்டாக்கினார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வால் (73), பஷிர் பந்தில் துரதிருஷ்டவசமாக போல்டானார். சர்பராஸ் கான் 14 ரன் எடுத்தார். அஷ்வின் (1) நிலைக்கவில்லை.ஒரு கட்டத்தில் 112/2 ரன் என இருந்த இந்திய அணி, அடுத்து 65 ரன் எடுப்பதற்குள் 177/7 என தவித்தது. துருவ் ஜுரல் (30), குல்தீப் (17) சேர்ந்து விக்கெட் சரிவை சற்று தடுத்து நிறுத்தினர்.இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து, 134 ரன் பின்தங்கியிருந்தது.இங்கிலாந்து சார்பில் 'சுழலில்' மிரட்டிய பஷிர் 4, ஹார்ட்லி 2 விக்கெட் சாய்த்தனர்.74இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை 74 சிக்சர் (4 டெஸ்ட்) அடிக்கப்பட்டன. அதிக சிக்சர் அடிக்கப்பட்ட டெஸ்ட் தொடர் வரிசையில் முதலிடத்தை, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா (2023ல் 74 சிக்சர், 5 டெஸ்ட்) தொடருடன் பகிர்ந்து கொண்டது.618நேற்று 73 ரன் எடுத்த ஜெய்ஸ்வால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் கோலி (655, 2016) உள்ளார். மூன்றாவது இடத்திற்கு டிராவிட் (602, 2002) பின்தங்கினார்.* ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்னுக்கும் மேல் குவித்த ஐந்தாவது இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால். இந்த வரிசையில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். இவர், 1970-71ல் 774 ரன் (வெ.இண்டீஸ்), 1978-79ல் 732 ரன் (வெ.இண்டீஸ்) எடுத்துள்ளார். கோலி (692, 655), திலிப் சர்தேசாய் (642), டிராவிட் (619, 602) அடுத்த 3 இடத்தில் உள்ளனர்.* ஒட்டுமொத்தமாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் உள்ளார். 1930ல் இங்கிலாந்துக்கு எதிராக இவர், 5 டெஸ்டில் 974 ரன் குவித்தார்.ஆடுகளம் காரணமாஇந்திய பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறுகையில்,'' இரண்டாவது நாளில் பந்தில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கவே இல்லை. ராஞ்சி ஆடுகளத்தின் பல இடங்களில் வெடிப்பு உள்ளதால், பந்துகள் திடீரென 'பவுன்ஸ்' ஆகின்றன. சில நேரங்களில் பந்துகள் தாழ்வாக செல்கின்றன. இது இந்திய பேட்டர்களுக்கு தொல்லையாக அமைந்தது,'' என்றார்.