ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. துாணாக நின்று 90 ரன் விளாசிய துருவ் ஜுரல், 'சுழலில்' மிரட்டிய அஷ்வின்(5 விக்.,), குல்தீப்(4 விக்.,) அணிக்கு கைகொடுத்தனர்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 353 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்து, 134 ரன் பின்தங்கியிருந்தது.
ஜுரல் 90 ரன்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல், குல்தீப் மிரட்டினர். இங்கிலாந்து பவுலர்களை கதறவிட்ட இவர்கள், 8வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தனர். 131 பந்துகள் தாக்குப்பிடித்த குல்தீப்(28), ஆண்டர்சன் 'வேகத்தில்' அவுட்டானார். ஹார்ட்லி பந்தில் ஒரு ரன் எடுத்த ஜுரல், டெஸ்ட் வாழ்வின் முதல் அரைசதம் எட்டினார். 9வது விக்கெட்டுக்கு ஜுரல்-ஆகாஷ் தீப்(9) 40 ரன் சேர்த்தனர். ஹார்ட்லி ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஜுரல், 90 ரன்னை எட்டினார். ஹார்ட்லி பந்தில் போல்டான ஜுரல்(90 ரன், 149 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஒரு கட்டத்தில் 177/7 என தவித்த இந்திய அணியை, ஜுருல் தனிஒருவனாக துாக்கி நிறுத்த, கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 130 ரன் சேர்க்க முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து 46 ரன் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.
'சுழல்' சூறாவளி
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, இந்திய 'சுழல்' புயலில் சிக்கியது. ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்ததால், புதிய பந்தில் முதல் ஓவரையே அஷ்வின் வீசினார். போட்டியின் 5வது ஓவரில் டக்கெட்(15), போப்பை(0) அடுத்தடுத்து அவுட்டாக்கினார். ஜோ ரூட்டும் அஷ்வின் பந்தில் சிக்கினார். இவருக்கு அவுட் தர, கள அம்பயர் தர்மசேனா மறுக்க, இந்தியா, 'ரிவியு' கேட்டது. 'ரீப்ளே'வில் எல்.பி.டபிள்யு., உறுதி செய்யப்பட, ரூட்(11) வெளியேறினார். இது, போட்டியில் திருப்பம் ஏற்படுத்தியது. 'பாஸ் பால்' முறையில் அதிரடியாக ஆடிய கிராலே(60), குல்தீப் பந்தில் போல்டானார். சிறிது நேரத்தில் கேப்டன் ஸ்டாக்சும்(4), குல்தீப் பந்தில் போல்டாக, இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 120 ரன் எடுத்து தவித்தது. ஜடேஜாவிடம் பேர்ஸ்டோவ்(30) 'சரண்டர்' ஆனார். ஒரே ஓவரில் போக்ஸ்(17), ஆண்டர்சனை(0) வெளியேற்றிய அஷ்வின், மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் 110/3 என வலுவாக இருந்த இங்கிலாந்து, எஞ்சிய 7 விக்கெட்டுகளை 35 ரன்னுக்கு இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவுக்கு 192 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நல்ல துவக்கம்
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா(24*), ஜெய்ஸ்வால்(16*) வலுவான அடித்தளம் அமைத்தனர். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 152 ரன் மட்டுமே தேவைப்படுகிறது. இன்று இந்தியா விரைவாக வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.'
தலைமை' வாய்ப்பு
இந்தியா-இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் வரும் மார்ச் 7ல் தர்மசாலாவில்(இமாச்சல பிரதேசம்) துவங்குகிறது. இது, அஷ்வினுக்கு 100வது டெஸ்ட். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''தர்மசாலாவில் மகத்தான மைல்கல்லை எட்ட உள்ளார் அஷ்வின். இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, அஷ்வின் வழிநடத்த... இந்திய வீரர்கள் மைதானத்தில் களமிறங்க வேண்டும். இந்த வாய்ப்பை கேப்டன் ரோகித் சர்மா வழங்க வேண்டும்,''என்றார்.
354 விக்கெட்
இங்கிலாந்தின் போப்பை அவுட்டாக்கிய அஷ்வின், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் பட்டியலில் கும்ளேவை (350 விக்கெட்) முந்தி முதலிடம் பிடித்தார். இதுவரை 59 டெஸ்டில், 354 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
35 முறை
இரண்டாவது இன்னிங்சில் 'சுழலில்' அசத்திய அஷ்வின், டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தை கும்ளேவுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 35 முறை இச்சாதனை படைத்தனர். சர்வதேச அரங்கில் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் முரளிதரன் (67 முறை), ஆஸ்திரேலியாவின் வார்ன் (37), நியூசிலாந்தின் ரிச்சர்டு ஹாட்லீ (36) உள்ளனர்.
ஆசியாவில் அசத்தல்
ஆசிய மண்ணில் 400 விக்கெட் கைப்பற்றிய 3வது பவுலரானார் அஷ்வின். இதுவரை 68 டெஸ்டில், 404 விக்கெட் சாய்த்துள்ளார். ஏற்கனவே இலங்கையின் முரளிதரன் (612 விக்கெட்), இந்தியாவின் கும்ளே (419) இம்மைல்கல்லை எட்டினர்.
105 விக்கெட்
இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பவுலரானார் அஷ்வின். இதுவரை 23 டெஸ்டில், 105 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அடுத்த இரு இடங்களில் சந்திரசேகர் (95 விக்கெட்), கும்ளே (92) உள்ளனர்.
சொந்த மண்ணில் கலக்கல்
சொந்த மண்ணில் அதிக முறை ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் அஷ்வின். இவர், 27 முறை (59 டெஸ்ட்) இப்படி சாதித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (45 முறை, 73 டெஸ்ட்) உள்ளார்.
91 விக்கெட்
இங்கிலாந்துக்கு எதிராக 91 விக்கெட் (17 டெஸ்ட்) சாய்த்துள்ள அஷ்வின், சொந்த மண்ணில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலரானார். இதற்கு முன் ஹர்பஜன் சிங் (86 விக்கெட், எதிர்: ஆஸி.,) முதலிடத்தில் இருந்தார்.
இரண்டாவது இடம்
டெஸ்ட் அரங்கில் அதிக வயதில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் அஷ்வின் (37 ஆண்டு, 159 நாள்). முதலிடத்தில் வினோ மன்கட் (37 ஆண்டு, 306 நாள், எதிர்: பாகிஸ்தான், 1955, இடம்: பெஷாவர்) உள்ளார்.
12 மைதானம்
அஷ்வின் சொந்த மண்ணில் 16 மைதானங்களில் டெஸ்டில் விளையாடி உள்ளார். இதில் 12 மைதானங்களில், குறைந்தபட்சம் ஒரு முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் அதிகபட்சமாக 4 முறை இப்படி சாதித்துள்ளார்.
4000 ரன்
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2வது இன்னிங்சில் தனது 21வது ரன்னை எட்டிய போது டெஸ்ட் அரங்கில் 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 58 டெஸ்டில், 11 சதம் உட்பட 4003 ரன் எடுத்துள்ளார்.* தவிர இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்னை கடந்தார். இதுவரை 13 டெஸ்டில், 3 சதம் உட்பட 1013 ரன் எடுத்துள்ளார்.
ராஜஸ்தான் ஆதிக்கம்
ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வால் (73, 16* ரன்), துருவ் ஜுரெல் (90 ரன்), அஷ்வின் (1, 5 விக்கெட்), ராஞ்சி டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
5 விக்கெட்
ராஞ்சி டெஸ்டில் சுழலில் அசத்திய இங்கிலாந்தின் பஷிர், முதல் தர போட்டியில் முதன்முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார். தவிர இவர், இந்திய மண்ணில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த இளம் (20 ஆண்டு, 135 நாள்) அன்னிய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ் (19 ஆண்டு, 323 நாள், 1996, கான்பூர், 6 விக்கெட்) உள்ளார்.* இளம் வயதில் ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 2வது இங்கிலாந்து பவுலரானார் பஷிர். முதலிடத்தில் ரேகன் அகமது (18 ஆண்டு, 128 நாள், எதிர்: பாகிஸ்தான், கராச்சி, 2022) உள்ளார்.