உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராம் சியா ராம்... மஹாராஜ் பரவசம்: அயோத்தி செல்ல ஆர்வம்

ராம் சியா ராம்... மஹாராஜ் பரவசம்: அயோத்தி செல்ல ஆர்வம்

கேப்டவுன்: ''ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவேன். 'ராம் சியா ராம்' பாடலை கேட்கும் போது உற்சாகம் பிறக்கும். அயோத்தி சென்று ராமரை தரிசிக்க ஆர்வமாக உள்ளேன்,'' என கேஷவ் மஹாராஜ் தெரிவித்தார்.தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வீரர் கேஷவ் மஹாராஜ். சுழற்பந்துவீச்சில் எதிரணிகளை திணறடிப்பார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மூதாதையர் உபி.,யின் சுல்தான்பூரில் இருந்து தென் ஆப்ரிக்காவின் டர்பனுக்கு 1874ல் குடிபெயர்ந்தனர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட மஹாராஜ், தனது பேட்டில் 'ஓம்' என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார். அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் திறக்கப்பட்டதை வரவேற்றார். ராம பக்தரான இவர், களமிறங்கும் போதெல்லாம் 'ராம் சியா(சீதா) ராம்' பாடல் மைதானத்தில் ஒலிக்கும். சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் மஹாராஜ் பேட் செய்ய வந்த போது இதே பாடல் ஒலிபரப்பானது. அப்போது கைகூப்பி ராமருக்கு மரியாதை செலுத்திய இந்திய வீரர் கோலி, ராமரை போல வில் அம்பை எய்து சைகை செய்தார்.தனது ஆன்மிக பயணம் குறித்து மஹாராஜ் கூறியது: எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். மதம், ஆன்மிகத்தில் பற்று கொண்ட குடும்பத்தில் பிறந்தவன். ஆன்மிகத்தை கற்றுக் கொடுத்தனர். ஒருபோதும் என் மீது திணிக்கவில்லை. வாழ்க்கையின் கடின காலத்தில் ஆன்மிகம் வழிகாட்டுவதாக உணர்கிறேன். வாழ்க்கையில் ஏதாவது ஒன்றின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நான் மத நம்பிக்கைகளை பின்பற்றுகிறேன். வீட்டில் அனைத்து ஹிந்து பண்டிகைகளையும் கொண்டாடுவேன்.நான் தீவிர ராம பக்தன். மைதானத்தில் களமிறங்கும் போது 'ராம் சியா ராம்' பாடலை ஒலிபரப்ப சொல்வேன். இதை கேட்கும் போது மனதில் உற்சாகம் பிறக்கும். ஆட்டத்தில் கவனம் செலுத்தவும் உதவும். கடவுள் ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டது பெரிய விஷயம். எதிர்காலத்தில் இந்தியா வரும் போது கண்டிப்பாக அயோத்தி சென்று ராமரை தரிசிப்பேன்.இவ்வாறு கேஷவ் மஹாராஜ் கூறினார்.

'ஸ்பின்னர்' முக்கியம்

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் வரும் ஜூனில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடரில் 'ஸ்பின்னர்'கள் முக்கிய பங்கு வகிப்பர். இங்கு பவுண்டரிக்கான அளவு குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு அணியிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடிய 'ஸ்பின்னர்' இடம் பெற வேண்டியது அவசியம். விரல் மூலம் பந்தை சுழற்றும் வித்தையை வரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன். சுழற்பந்துவீச்சு மட்டுமல்லாமல் அதிரடியாக பேட் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.- கேஷவ் மஹாராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்