உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சதம் விளாசினார் ரிஷாப் பன்ட்: இந்திய வெற்றிக்கு 8 விக்கெட் தேவை

சதம் விளாசினார் ரிஷாப் பன்ட்: இந்திய வெற்றிக்கு 8 விக்கெட் தேவை

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் ரிஷாப் பன்ட் சதம் விளாச, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்று நியூசிலாந்தின் எஞ்சிய 8 விக்கெட்டுகளை நமது பவுலர்கள் கைப்பற்றினால், வெற்றி பெறலாம். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 368 ரன் எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 486/4 ரன் எடுத்து, 118 ரன் முன்னிலை பெற்றது.

ஜுரல் அரைசதம்

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. நாதன் ஸ்மித் ஓவரில், 'நைட் வாட்ச்மேன்' அன்ஷுல் கம்போஜ் இரு பவுண்டரி விளாச, இந்தியா 500 ரன்னை கடந்தது. கம்போஜ், 38 ரன் எடுத்தார். பிலிப்ஸ் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ரிஷாப், தனது வழக்கான 'ஸ்டைலில்' சதம் எட்டினார். ரச்சின் ரவிந்திரா பந்தில் ரிஷாப், 128 ரன்னுக்கு (153 பந்து, 10X4, 6X6) அவுட்டானார். துருவ் ஜுரல் அரைசதம் எட்டினார். வாஷிங்டன் சுந்தர், 24 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் பிலிப்ஸ் ஓவரில் 2 சிக்சர் அடித்த ஆகாஷ் தீப் (13) கைகொடுத்தார். ஜுரல் 78 ரன்னுக்கு (79 பந்து, 7X4, 1X6) ரன்னுக்கு பிலிப்ஸ் வலையில் சிக்கினார். இந்திய அணி முதல் இன்னிங்சை 720/9 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. 352 ரன் முன்னிலை பெற்றது.

பும்ரா மிரட்டல்

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே 'ஷாக்' கொடுத்தார் பும்ரா. இவரது 'வேகத்தில் 'கேப்டன் டாம் லதாம் மீண்டும் 'டக்' அவுட்டானார். பிரசித் கிருஷ்ணா பந்தில் ஹென்றி நிக்கோல்ஸ் (31) கொடுத்த 'கேட்ச்சை', ஷார்ட் லெக் திசையில், 'ஹெல்மெட்' அணிந்து நின்ற துருவ் ஜுரல் முன்னோக்கி 'டைவ்' அடித்து, வலது கையால் துடிப்பாக பிடிக்க, கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்தனர். நியூசிலாந்து 22.1 ஓவரில் 60/2 ரன் எடுத்து தவித்தது. இந்த சமயத்தில் டேவன் கான்வே, ரச்சின் ரவிந்திரா போராடினர். ஆடுகளம் மந்தமாக இருந்ததால், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். 3வது விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 59 ரன் சேர்த்தனர். நான்காம் நாள் முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 45 ஓவரில் 119/2 ரன் எடுத்திருந்தது. அரைசதம் கடந்த கான்வே (59 ரன், 137 பந்து), ரச்சின் (27 ரன், 72 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா வெற்றியை எட்ட 8 விக்கெட் தேவைப்படுகிறது. மறுபக்கம் 233 ரன் பின்தங்கியுள்ள நியூசிலாந்து, இன்று 90 ஓவர் தாக்குப்பிடித்து, போட்டியை 'டிரா' செய்வது கடினம். சுருக்கமான ஸ்கோர் முதல் இன்னிங்ஸ் நியூசிலாந்து | 368 (121 ஓவர்)இந்தியா | 720/9 'டிக்ளேர்' (166 ஓவர்) பேட்டிங் ராகுல் | 136(290)ரிஷாப் | 128(153)சுப்மன் | 98(146)ஜெய்ஸ்வால் | 85(89)தேவ்தத் | 80(175)ஜுரல் | 78(79) பவுலிங் பிலிப்ஸ் | 3/154 (24 ஓவர்)ரச்சின் | 2/44 (10 ஓவர்) இரண்டாவது இன்னிங்ஸ் நியூசிலாந்து 119/2 (45 ஓவர்) பேட்டிங் கான்வே | 59*(137)ரச்சின் | 27*(72) பவுலிங் பும்ரா | 1/33 (9 ஓவர்)பிரசித் | 1/20 (8 ஓவர்) முதல் கீப்பர் 'சேனா' நாடுகளுக்கு (தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக டெஸ்டில் சதம் விளாசிய முதல் ஆசிய விக்கெட்கீப்பர், 6வது இந்திய பேட்டர் என்ற பெருமை பெற்றார் ரிஷாப் பன்ட். இதற்கு முன் இந்தியாவின் சச்சின், அசார், டிராவிட், கோலி, ராகுல் இம்மைல்கல்லை எட்டினர். * டெஸ்ட் அரங்கில் நேற்று 9வது சதம் அடித்தார் ரிஷாப் பன்ட். இதில் இங்கிலாந்துக்கு எதிராக 4 (114, ஓவல், 2018, 146, பர்மிங்காம், 2022, 134, 118, லீட்ஸ், 2025), ஆஸி., (159, சிட்னி, 2019), தென் ஆப்ரிக்கா (100, கேப்டவுன், 2022), நியூசிலாந்துக்கு (128, வெலிங்டன், 2026) எதிராக தலா ஒரு சதம் அடித்துள்ளார். * டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ரிஷாப் பன்ட் (9 சதம்). முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (17 சதம்), ஜிம்பாப்வேயின் ஆன்டி பிளவர் (12) உள்ளனர். 'மெகா' ஸ்கோர் டெஸ்டில், இந்தியா தனது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை (720/9 டிக்ளேர், எதிர், நியூசி., வெலிங்டன், 2026) நேற்று பதிவு செய்தது. முதல் இரு இடங்களில் 759/7 டிக்ளேர், (எதிர், இங்கி., 2016, சென்னை), 726/9 டிக்ளேர் (எதிர், இலங்கை, 2009, பிரபோர்ன்) உள்ளன. * இது, நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக 587/7 ரன்னுக்கு டிக்ளேர் (ஆமதாபாத், 1999, டிரா) செய்திருந்தது. * ஒட்டுமொத்தமாக நியூசிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 660/5 ரன் (1995, வெலிங்டன்) எடுத்திருந்தது. * நியூசிலாந்து மண்ணில் டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் நியூசிலாந்து அணி 715/6 ரன் (எதிர், வங்கம், 2019, ஹாமில்டன்) எடுத்திருந்தது. * டெஸ்டில் அதிக முறை 700+ ரன் எடுத்த அணிகள் பட்டியலில் இந்தியா 2வது இடம் (5 முறை) பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (7) உள்ளது. ஏழாவது அதிசயம் * டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு இன்னிங்சில் முதல் 7 விக்கெட்டுக்கும் 50 + ரன் எடுத்து இந்தியா சாதனை படைத்தது. முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ராகுல்-130 ரன், அடுத்து ராகுல், படிக்கல்-165 ரன், ராகுல், சுப்மன்- 91 ரன், சுப்மன், ரிஷாப்-100 ரன், ரிஷாப், கம்போஜ்-68 ரன், ரிஷாப், துருவ் ஜுரல்- 75 ரன், ஜுரல், வாஷிங்டன்- 54 ரன் சேர்த்து அசத்தினர். இந்திய அணியின் 'டாப்-5' பேட்டர்கள் 80+ ரன் எடுத்தனர். பும்ரா 'பவர்' டெஸ்டின், இரு இன்னிங்சின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் ஆனார் பும்ரா (டாம் லதாம், வெலிங்டன், 2026). இதற்கு முன் ஸ்ரீசாந்த் (கெய்ல், எதிர், வெ.இண்டீஸ், இரு முறை, கிங்ஸ்டன், 2006), ஜாகிர் கான் (இரு இன்னிங்சின் முதல் பந்தில் ஜாவித் ஓமர், எதிர், வங்கம், 2007) அசத்தினர். 9வது சதம் டெஸ்ட் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் ரிஷாப் பன்ட் (108) 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (138) உள்ளார். * முதல் இன்னிங்சில் இந்தியா சார்பில் 14 சிக்சர் அடிக்கப்பட்டன. டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்தியா சார்பில் அதிக சிக்சர் அடித்த பட்டியலில் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டது. ஏற்கனவே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (2019, விசாகப்பட்டினம்) 14 சிக்சர் அடிக்கப்பட்டிருந்தது. மாறாத ஆட்டம் டெஸ்ட் அரங்கில் அசத்துகிறார் ரிஷாப் பன்ட். கடந்த 10 டெஸ்டில் 134, 118, 25, 65, 74, 9, 54, 27, 2, 7, 13, 81, 39, 66, 63, 128 என ரன் மழை பொழிந்துள்ளார். விபத்து, காயத்தை கடந்து சிக்சர் மன்னனாக திகழ்கிறார். நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் இவரது உடற்தகுதி தொடர்பான விமர்சனங்களை தகர்த்தார். எட்டுத்திக்கும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இவர் கூறுகையில்,''சிறுவனாக இருக்கும் போதே சிக்சர் அடிப்பதே என் இலக்கு. சிக்சர் அடித்து தான் பல முறை சதம் எட்டியுள்ளேன். இதே சிக்சர் ஆசையால் சில முறை சதத்தை எட்ட தவறி இருக்கிறேன். இப்போது சிக்சர் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். எங்கு விளையாடினாலும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். நியூசிலாந்து மண்ணில் முதல் சதம் அடித்தது 'ஸ்பெஷல்' தருணம்,''என்றார். தப்ப முடியுமா நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா கூறுகையில்,''போட்டியில் மிகவும் பின்தங்கியுள்ளோம். தோல்வியில் இருந்து தப்ப, இன்று 90 ஓவர் பேட் செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம். டேவன் கான்வே மீது நம்பிக்கை உள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்