விசாகப்பட்டனம்: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில் சதம் விளாச, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 396, இங்கிலாந்து 253 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்தது.
ஆண்டர்சன் அசத்தல்
மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு 41 வயதான ஆண்டர்சன் மிரட்டினார். இவரது 'வேகத்தில்' கேப்டன் ரோகித் சர்மா(13) போல்டானார். ஜெய்ஸ்வால், 17 ரன்னுக்கு ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். பின் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் நம்பிக்கை தந்தனர். 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர்.
ஸ்டோக்ஸ் 'கேட்ச்'
இந்த நேரத்தில் ஹார்ட்லி பந்தை வீணாக துாக்கி அடித்தார் ஸ்ரேயாஸ்(29). இதை நீண்ட துாரம் ஓடிச் சென்று அருமையாக பிடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ். அடுத்து வந்த ரஜத் படிதார்(9) விரைவில் அவுட்டாக, இந்தியா 4 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்து தவித்தது. உறுதியாக ஆடிய சுப்மன் அணியை மீட்டார். அரைசதம் கடந்ததும் அதிரடிக்கு மாறினார். ரேஹன் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். இவருக்கு அக்சர் படேல் ஒத்துழைக்க, ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்தனர்.
சுப்மன் சதம்
பஷிர் பந்தில் ஒரு ரன் எடுத்த சுப்மன், சதம் எட்டினார். இவர் 104 ரன்னுக்கு(11 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். அக்சர், 45 ரன் எடுத்தார். பரத்(6) நிலைக்கவில்லை. அஷ்வின்(29) ஓரளவுக்கு கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்துக்கு 399 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து தரப்பில் ஹார்ட்லி 4, ரேஹன் 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கிராலே, டக்கெட் நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த நிலையில், அஷ்வின் பந்தில் டக்கெட்(28) அவுட்டானார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிராலே(29), ரேஹன் அகமது(9) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 332 ரன் தேவை. கிராலே, போப், ஸ்டோக்ஸ் நின்று ஆடினால், சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினால், வெற்றியை வசப்படுத்தலாம்.
60-70 ஓவர் போதும்...
இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன் கூறுகையில்,''நாங்கள் 'பாஸ் பால்' திட்டப்படி அதிரடியாக ரன் சேர்ப்போம் என்பதால், இந்திய வீரர்கள் பதட்டத்துடன் ஆடினர். எத்தகைய இலக்கை நிர்ணயிப்பது என குழப்பம் அடைந்தனர். பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்துடன் பேசிய போது, 600 ரன் நிர்ணயித்தாலும் விரட்டி எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். இன்னும் 180 ஓவர்கள் உள்ளன. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. 60 அல்லது 70 ஓவரில் வெற்றி இலக்கை எட்ட முயற்சிப்போம்,''என்றார்.
ஜோ ரூட் காயம்
இரண்டாவது இன்னிங்சில் ஹார்ட்லி பந்தை(17.4வது ஓவர்) சுப்மன் கில் அடித்தார். இது 'எட்ஜ்' ஆகி 'ஸ்லிப்' பகுதிக்கு சென்றது. இதை பிடிக்க இங்கிலாந்தின் ஜோ ரூட் முயற்சித்தார். இவரது வலது கை சுண்டு விரலை தாக்கிய பந்து, பவுண்டரிக்கு சென்றது. காயம் ஏற்பட்ட விரலில் 'ஐஸ்' ஒத்தடம் கொடுக்கப்பட்டது. களத்தை விட்டு வெளியேறிய ரூட், 'பீல்டிங்' செய்ய வரவில்லை. இது குறித்து ஆண்டர்சன் கூறுகையில்,''இன்று ரூட் சேவை அணிக்கு தேவை. 'பேட்' பிடிக்கும் அளவுக்கு தேறி விடுவார் என நம்புகிறேன்,''என்றார்.
3
சுப்மன் கில், 24 நேற்று டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதம் அடித்தார். 25 வயதுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேல் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரரானார். ஒருநாள் போட்டியில் 6, டெஸ்டில் 3, 'டி-20' போட்டியில் 1 என 10 சதம்(99 இன்னிங்ஸ்) அடித்துள்ளார். முதல் இரு இடங்களில் சச்சின்(30 சதம், 273 இன்னிங்ஸ்), கோலி(21 சதம், 163 இன்னிங்ஸ்) உள்ளனர்.
சேஸ் செய்ய முடியுமா...
இங்கிலாந்தின் வெற்றிக்கு 399 ரன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 332 ரன் தேவைப்படுகிறது. இதை எட்டுவது கடினம். டெஸ்ட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அதிகபட்சமாக 418 ரன்( எதிர்: ஆஸி., 2003, ஆன்டிகுவா) சேஸ் செய்தது.
* இந்திய மண்ணில் அதிகபட்சமாக 276 ரன்னை வெஸ்ட் இண்டீஸ்(1987, டில்லி சேஸ் செய்தது.
* இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 378 ரன்னை (2022, பர்மிங்காம்) சேஸ் செய்திருந்தது.
* ஆசிய மண்ணில் அதிகபட்சமாக 395 ரன்னை வெஸ்ட் இண்டீஸ் (எதிர்: வங்கதேசம், 2021, சட்டோகிராம்) விரட்டியது.