உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வரமாக சூர்யா... தரமாக பும்ரா: சரியா கணிக்கிறார் யுவராஜ்

வரமாக சூர்யா... தரமாக பும்ரா: சரியா கணிக்கிறார் யுவராஜ்

புதுடில்லி: ''இந்திய அணி மீண்டும் உலக கோப்பை வெல்ல பும்ரா, சூர்யகுமார் பெரிதும் கைகொடுப்பர்,'' என யுவராஜ் சிங் தெரிவித்தார்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர்(ஜூன் 1-29) நடக்க உள்ளது. ஜூன் 9ல் நியூயார்க்கில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியது: 'டி-20' உலக கோப்பை தொடரில் சூர்யகுமார் (செல்லமாக சூர்யா), பும்ரா முக்கிய பங்கு வகிப்பர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசும் திறன் பெற்றவர் சூர்யகுமார். 15 பந்துகளில் போட்டியின் போக்கை மாற்றிவிடுவார். வேகப்பந்துவீச்சில் 'யார்க்கர்' பும்ரா மிரட்டுவார். இருவரும் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நனவாக கைகொடுப்பர். அணியில் சகால் போன்ற 'லெக்-ஸ்பின்னருக்கு' வாய்ப்பு அளிக்கலாம்.

கார்த்திக் வாய்ப்பு

ஐ.பி.எல்., தொடரில் விக்கெட்கீப்பர்/பேட்டராக தினேஷ் கார்த்திக், 38 அசத்துகிறார். உலக கோப்பை தொடருக்கு இவரை தேர்வு செய்தால், விளையாடும் லெவனில் வாய்ப்பு அளிக்க வேண்டும். 2022ல் உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் நல்ல 'பார்மில்' உள்ளனர். இவர்கள் இளம் வீரர்கள் என்பது சாதகம். சென்னை அணிக்காக ஷிவம் துபே ரன் மழை பொழிகிறார். இவரையும் உலக தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கலாம். இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

துாதராக...

இந்திய அணி முதலாவது 'டி-20' உலக கோப்பை(2007) வெல்ல யுவராஜ் முக்கிய காரணம். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார். இவரை கவுரவிக்கும் விதமாக, வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தொடரை பிரபலப்படுத்துவார்.யுவராஜ் கூறுகையில்,''ஒரே ஓவரில் 6 சிக்சர் விளசியது உட்பட 'டி-20' உலக கோப்பை நினைவுகள் எப்போதும் இனிமையானவை. அமெரிக்காவிலும் கிரிக்கெட் போட்டி பிரபலமாக உள்ளது. இந்த ஆண்டு விளையாட்டு உலகின் சிறந்த போட்டியாக இந்தியா-பாக்., மோதல் அமையலாம். துாதராக நியமிக்கப்பட்டதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்,''என்றார்.

கோலி, ரோகித் ஓய்வு...

யுவராஜ் சிங் கூறுகையில்,''இந்தியாவின் சிறந்த வீரர்களாக கோலி, ரோகித் சர்மா திகழ்கின்றனர். இவர்களது வயது பற்றியே அதிகம் பேசுவர். வரும் உலக கோப்பை தொடருக்கு பின், இருவரும் 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம். இந்திய 'டி-20' அணியில் நிறைய இளம் வீரர்களை காண விரும்புகிறேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை