| ADDED : ஜூன் 13, 2024 11:11 PM
தரவுபா: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ். நேற்று நடந்த லீக் போட்டியில் 13 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீசின் தரவுபா மைதானத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.ரூதர்போர்டு 'சிக்சர்'வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், ஜான்சன் சார்லஸ் ஜோடி துவக்கம் தந்தது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டுத் தாக்கினர். பவுல்ட் வீசிய முதல் ஓவரில் சார்லஸ் (0) போல்டானார். சவுத்தீ பந்துகளில் நிகோலஸ் பூரன் (17), கேப்டன் பாவெல் (1) சிக்கினர். ராஸ்டன் சேஸ் (0), பெர்குசனிடம் வீழ்ந்தார்.பிரண்டன் (9), ஆன்ட்ரி ரசல் (14) ஏமாற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 76/7 ரன் என திணறியது. ஒரு கட்டத்தில் 18 ஓவரில் 112/9 ரன் எடுத்தது. மிட்சல் வீசிய 19வது ஓவரில் ரூதர்போர்டு, 3 சிக்சர் அடிக்க 19 ரன் எடுக்கப்பட்டன.20வது ஓவரில் 18 ரன் என கடைசி 12 பந்தில் 37 ரன் எடுக்கப்பட்டன. 'டி-20' உலக தொடரில் 10 வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவானது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 149/9 ரன் எடுத்தது. 39 பந்தில் 68 ரன் (6X6, 2X4) எடுத்த ரூதர்போர்டு அவுட்டாகாமல் இருந்தார்.பிலிப்ஸ் ஆறுதல்நியூசிலாந்து அணிக்கு கான்வே (5), ஆலன் (26) ஜோடி துவக்கம் தந்தது. ரச்சின் 10, வில்லியம்சன் 1 ரன்னில் அவுட்டாகினர். மிட்செல் (12), நீஷம் (10) அணியை கைவிட்டனர். போராடிய பிலிப்ஸ் மட்டும் 40 ரன் எடுத்தார். பவுல்ட் (7) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 136/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அல்ஜாரி ஜோசப் 4, குடகேஷ் 3 விக்கெட் சாய்த்தனர்.சிக்கலில் நியூசிலாந்து'சி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் (6), ஆப்கானிஸ்தான் (4) முதல் இரு இடத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தான், அடுத்த இரு போட்டியில் உகாண்டா, பப்புவா நியூ கினியா என ஏதாவது ஒரு அணியை வீழ்த்தினால் போதும். அடுத்து சுற்றுக்கு சென்று விடும். முதல் இரு போட்டியில் தோற்ற நியூசிலாந்து, அடுத்த இரு போட்டியில் வென்றாலும் 4 புள்ளி மட்டும் பெற முடியும் என்பதால் 'சூப்பர்-8' வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.கடந்த 2015, 2019, 2023 என 3 உலக கோப்பை (ஒருநாள்) தொடரில் அரையிறுதி, 2016, 2021, 2022 'டி-20' உலக தொடரில் அரையிறுதி என மிரட்டிய நியூசிலாந்து இம்முறை முதல் சுற்றுடன் நடையை கட்ட காத்திருக்கிறது.