பிளே ஆப் சுற்றில் திருப்பூர் * கோவை அணி ஏமாற்றம்
நெல்லை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர் அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நெல்லையில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. கோவை அணிக்கு துவக்கமே சரியாக அமையவில்லை. நடராஜன் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ஜிதேந்திர குமார் (6) அவுட்டானார். சிலம்பரசன் வீசிய 4வது ஓவரில் சச்சின் 2, சுரேஷ் ஒரு பவுண்டரி அடித்தனர். 'பவர் பிளே' ஓவர் (6) முடிவில் கோவை அணி 41/1 ரன் எடுத்திருந்தது. சுரேஷ் 21 ரன் எடுத்து இசக்கிமுத்து பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இசக்கிமுத்து, குரு ராகவேந்திரனையும் (11) அவுட்டாக்கினார். கேப்டன் ஷாருக்கான் வந்த வேகத்தில், முதல் இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என அடித்தார். மறுபக்கம் மீண்டும் வந்த இசக்கிமுத்து, பாலசுப்ரமணியத்தை (24) வெளியேற்றினார். ஷாருக்கான் 9 பந்தில் 19 ரன் எடுத்து, சாய் கிஷோர் பந்தில் அவுட்டானார். இசக்கிமுத்து ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த விஷால் வைத்யாவை (13), சிலம்பரசன் திருப்பி அனுப்பினார். கோவை அணி 20 ஓவரில் 137/9 ரன் மட்டும் எடுத்தது. திருப்பூர் சார்பில் இசக்கிமுத்து 3, சாய் கிஷோர், நடராஜன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.அடுத்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு துஷார் (13) 'ஷாக்' கொடுத்தார். சாய் கிஷோர் 24 ரன் எடுத்தார். அமித் சாத்விக் அரைசதம் கடக்க வெற்றி எளிதானது. கடைசியில் திவாகர் பந்தில் அமித் சிக்சர் அடிக்க, திருப்பூர் அணி 16.5 ஓவரில் 140/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோவை அணி 5வது (6ல்) தோல்வியை சந்தித்தது. திருப்பூர் அணி 'பிளே ஆப்' வாய்ப்பை உறுதி செய்தது.